Posted in

கச்சத்தீவு விவகாரம் முடிந்துபோன ஒன்று: இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் அதிரடி!

சென்னைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவருமான ரவூப் ஹக்கீம், கச்சத்தீவின் இறையாண்மை என்பது சர்வதேச சட்டம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி ஏற்கனவே தீர்க்கப்பட்ட ஒரு விவகாரம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் எல்லைத் தாண்டும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வாக கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுப்பது புத்திசாலித்தனமான அணுகுமுறை அல்ல என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதன் மூலம் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச சட்டக் கட்டமைப்புகளின் அடிப்படையில் கச்சத்தீவின் மீதான இலங்கையின் இறையாண்மையை இந்திய மத்திய அரசு எப்போதோ ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். இதனை சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக மாற்றியமைக்க வேண்டுமெனில் ராணுவ நடவடிக்கை மூலம் மட்டுமே சாத்தியம் என்றும், ஆனால் இந்திய அரசு ஒருபோதும் அத்தகைய பாதையைத் தேர்ந்தெடுக்காது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும், கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவிற்குச் செல்லும் இந்திய பக்தர்களுக்கு இலங்கை கடற்படை எவ்வித தடையும் விதிப்பதில்லை என்றும், எல்லையைத் தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும்போதுதான் அது பெரும் நெருக்கடியாக மாறுகிறது என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது என்பது வெறும் சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு முக்கியமான மனிதாபிமான மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினை என்று ஹக்கீம் வருத்தம் தெரிவித்தார். இந்த விவகாரத்திற்கு நீதிமன்றங்கள் மூலமாக மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது என்றும், இரு நாட்டு மீனவர்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுறவு சங்கக் கட்டமைப்பை (Joint Cooperative Society) உருவாக்குவதே இதற்குச் சிறந்த தீர்வாக அமையும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார். அத்துடன், தமிழக மீனவர்கள் பாரம்பரிய ஆழமற்ற கடற்கரை மீன்பிடிப்பிலிருந்து ஆழ்கடல் மீன்பிடி முறைக்கு மாறுவதற்கு இந்திய அரசு நிதி மானியங்களை வழங்கி உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துப் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணிக் குழு விரைவில் சென்னைக்கு வரவுள்ளதாக ரவூப் ஹக்கீம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த கூட்டுக்குழு, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, இரு நாட்டு மீனவர்களின் நீண்டகால வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வு காண்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளது.