Posted in

பதவி விலக மாட்டேன்.. நாட்டைச் சீரமைக்க எனக்கு நேரம் வேண்டும் – கிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் பிடிவாதம் 

லண்டனில் இன்று ஆற்றிய உரையில் பிரதமர் கீர் ஸ்டார்மர், தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, நலிவடைந்து வரும் பிரிட்டிஷ் ஸ்டீல் (British Steel) நிறுவனத்தைத் தேசியமயமாக்கப் போவதாக அவர் அறிவித்தார். “நாட்டின் அடிப்படைத் தேவைகளை அரசுப் பொறுப்பேற்க வேண்டிய நேரம் இது” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பிரெக்சிட் (Brexit) காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரிட்டனின் பொருளாதாரத்தைச் சீரமைக்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) மீண்டும் நெருக்கமான உறவை ஏற்படுத்தவும், இளைஞர்களுக்கான ‘இராஸ்மஸ்’ (Erasmus) திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் அவர் உறுதி பூண்டுள்ளார்.

தன் மீதான ராஜினாமா கோரிக்கைகளை முற்றிலுமாக நிராகரித்த ஸ்டார்மர், “நான் இந்தப் பணியிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. நாட்டைப் பெரும் குழப்பத்தில் தள்ள நான் விரும்பவில்லை. எனது கொள்கைகள் மீது சந்தேகம் கொண்டவர்களுக்கு நான் யார் என்பதை நிரூபித்துக் காட்டுவேன்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி என்பது கடினமானதுதான் என்பதை ஒப்புக்கொண்ட அவர், வெறும் சிறு மாற்றங்கள் மட்டும் போதாது, பிரிட்டனுக்குப் பெரிய அளவிலான மாற்றங்கள் தேவை என்றும், அதற்குத் தனது 10 ஆண்டுகாலத் திட்டம் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

அரசியல் எதிரிகளான நைஜல் ஃபரேஜின் ‘ரிஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சியைச் சாடிய அவர், அவர்கள் வெறும் குறைகளை மட்டுமே கூறி பிரிவினையைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டினார். அதே சமயம், தனது சொந்தக் கட்சிக்குள் தனக்கு எதிராகத் தலைமைப் போட்டியைத் தொடங்க முயற்சிக்கும் கேத்தரின் வெஸ்ட் (Catherine West) போன்றவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், ஒற்றுமையே இப்போதையத் தேவை என்று அவர் அழைப்பு விடுத்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தையும் அவர் தனது உரையில் முன்மொழிந்தார்.

இந்த உரையானது ஸ்டார்மருக்கு எதிரான உட்கட்சிப் பூசலைத் தற்காலிகமாகத் தணிக்குமா அல்லது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா என்பது வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள ‘கிங்ஸ் ஸ்பீச்’ (King’s Speech) நிகழ்வின் போது தெளிவாகும். தற்போதைக்குத் தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அவர் முன்வைத்துள்ள இந்த “ஐரோப்பிய இணைப்பு மற்றும் தேசியமயமாக்கல்” கொள்கைகள், தொழிலாளர் கட்சியின் இடதுசாரி ஆதரவாளர்களை ஈர்க்குமா என்பது சந்தேகமே. பிரிட்டன் அரசியலில் ஸ்டார்மரின் இந்த “வாழ்வா-சாவா” போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.