Posted in

ஸ்டார்மருக்கு 72 மணி நேர கெடு; பிரிட்டன் அரசியலில் பரபரப்பு!

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Keir Starmer) எதிராக ஆளும் தொழிலாளர் கட்சிக்குள்ளேயே (Labour Party)Creeping Coup எனப்படும் மறைமுக அரசியல் புரட்சி வெடித்துள்ளதால் லண்டன் அரசியல் களம் அதிரடியாக சூடுபிடித்துள்ளது. பிரிட்டனின் மேக்கர்ஃபீல்டு (Makerfield) நாடாளுமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கிரேட்டர் மான்செஸ்டர் முன்னாள் மேயரான ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இமாலய வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த அசுர வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் அடுத்த 72 மணி நேரத்திற்குள் தாமாக முன்வந்து விலக வேண்டும், இல்லையெனில் அவர் கட்டாயமாகப் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என அக்கட்சியின் அதிருப்தி எம்.பி.க்கள் இறுதி எச்சரிக்கை (Ultimatum) விடுத்துள்ளனர்.

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் சுமார் 55 சதவீத வாக்குகளைப் பெற்று, தங்களின் முதன்மை எதிரியான ‘ரிஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சியின் வேட்பாளரை 9,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த அசாதாரண வெற்றி, தற்போதைய பிரதமர் ஸ்டார்மரின் வீழ்ச்சியையும் பர்ன்ஹாமின் எழுச்சியையும் தெளிவாகக் காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். சமீபத்திய லோக்கல் பாடி தேர்தல்களில் தொழிலாளர் கட்சி சந்தித்த தொடர் தோல்விகள் மற்றும் ஸ்டார்மரின் பலவீனமான பொருளாதாரக் கொள்கைகளால் அதிருப்தியில் இருந்த 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி எம்.பி.க்கள், தற்போது பர்ன்ஹாமிற்குப் பின்னால் அணிவகுக்கத் தொடங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த புதிய பலத்தை வைத்து, பிரிட்டனை ஒரு புதிய இடதுசாரிப் பாதைக்கு (Left-wing path) கொண்டு செல்ல பர்ன்ஹாம் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். தனியார்மயமாக்கப்பட்ட எரிசக்தி, தண்ணீர் மற்றும் சமூக வீட்டுவசதித் துறைகளில் இலாப நோக்கத்தைத் தவிர்த்து, அவற்றை மீண்டும் அரசுடைமையாக்க வேண்டும் என்ற தீவிர கொள்கை முழக்கத்துடன் பர்ன்ஹாம் களம் இறங்கியுள்ளார். வெஸ்ட்மின்ஸ்டர் அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து பிரிட்டனை மீட்டு, இதுவரை புறக்கணிக்கப்பட்ட வடமேற்குப் பகுதிகளுக்குப் பொருளாதார நீதியைப் பெற்றுத் தருவதே தனது முதன்மை இலக்கு என பர்ன்ஹாம் தனது வெற்றி உரையில் அதிரடியாகப் பேசியுள்ளார்.

இருப்பினும், தமக்கு எதிராகக் கட்சிக்குள் உருவெடுத்துள்ள இந்த இமாலய நெருக்கடிக்கு அடிபணியப் போவதில்லை என்றும், தலைமைப் பதவிக்கான உள் கட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் அதனைத் துணிச்சலோடு எதிர்கொண்டு மீண்டும் போட்டியிடத் தயார் என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரிட்டன் அரசியல் சட்டப்படி, பொதுத்தேர்தலைச் சந்திக்காமலேயே ஆளும்கட்சி எம்.பி.க்கள் தங்களின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்பதால், அடுத்த சில தினங்களில் பிரிட்டனின் 7-வது புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.