ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிசி (Kisii) பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், வீட்டின் சமையலறைச் சுவரில் அன்னை மரியாள் காட்சி தருவதாகப் பரவிய வதந்தியைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை முற்றுகையிட்டதால், வெறுப்படைந்த நில உரிமையாளர் தன் சமையலறையையே இடித்துத் தள்ளிய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிசி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஆன்சோம்பி என்பவரின் மனைவி மேரி, தனது மண் சுவரால் ஆன சமையலறையின் கரி படிந்த சுவரில் அன்னை மரியாளைப் போன்ற உருவம் தெரிவதாக அண்டை வீட்டார்களிடம் தெரிவித்துள்ளார். இத்தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போலப் பரவியதையடுத்து, கென்யாவின் பல்வேறு நகரங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெபமாலை மற்றும் கேமராக்களுடன் அந்த வீட்டிற்குப் படை எடுக்கத் தொடங்கினர்.
அமைதியான தனது வீட்டைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடி, பிரார்த்தனைகளிலும் பாடல்களிலும் ஈடுபட்டுத் தங்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கியதால் குடும்பத்தினர் பெரும் அவதிக்குள்ளாகினர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல் துறையினர் அழைக்கப்பட்ட போதிலும், நிலைமை கைமீறிச் சென்றதால் நில உரிமையாளரான ஆன்சோம்பி கடும் விரக்தியடைந்தார்.
சுவரில் எந்தவிதமான தெய்வீக உருவமும் தனக்குத் தெரியவில்லை என்றும், மக்களின் தொல்லையிலிருந்து தனது குடும்பத்தின் நிம்மதியைக் காக்கவும் வேறு வழியின்றித் தனது சமையலறைச் சுவரைக் மண்வெட்டியால் அடித்து இடித்துத் தள்ளியதாக ஆன்சோம்பி தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்குப் பின் கூட்டம் கலைந்து சென்ற நிலையில், இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.