தீவிர வலதுசாரி அமைப்பான ‘யுனைட் தி கிங்டம்’ (Unite the Kingdom) மற்றும் பாலஸ்தீன ஆதரவு அமைப்புகளான ‘நக்பா டே’ (Nakba Day) குழுவினர் ஒரே நாளில் லண்டன் வீதிகளில் இறங்கத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இரு குழுக்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க 4,000-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒரே நாளில் போராட்டங்களுடன் சேர்த்து விம்பிளி மைதானத்தில் எஃப்.ஏ கோப்பை (FA Cup) இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளதால், லண்டன் மாநகரம் கடுமையான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது.
காவல்துறை துணை ஆணையர் ஜேம்ஸ் ஹார்மன் இது குறித்துக் கூறுகையில், “சமீபத்திய ஆண்டுகளில் லண்டன் எதிர்கொள்ளும் மிகவும் பரபரப்பான மற்றும் சவாலான நாளாக இது இருக்கும்” என்று எச்சரித்துள்ளார். மோதல்களைத் தவிர்க்க, இரண்டு பேரணிகளுக்கும் தனித்தனிப் பாதைகளை லண்டன் மாநகர காவல்துறை (Met Police) ஒதுக்கியுள்ளது. பாலஸ்தீன ஆதரவு பேரணி தெற்கு கென்சிங்டனில் தொடங்கி மால் (Pall Mall) நோக்கிச் செல்ல உள்ளது; அதே நேரத்தில் டாமி ராபின்சன் தலைமையிலான வலதுசாரி பேரணி யூஸ்டனில் (Euston) தொடங்கி நாடாளுமன்றச் சதுக்கம் வரை செல்ல உள்ளது. இந்த இரு குழுக்களின் தொடக்கப் புள்ளிகளும் 5.5 கி.மீ இடைவெளியில் இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த முறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களை லண்டன் போலீசார் மேற்கொண்டுள்ளனர். முதல்முறையாக நேரடி முக அங்கீகாரத் தொழில்நுட்பம் (Live Facial Recognition) போராட்டக் களங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள், குதிரைப்படை மற்றும் கவச வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவோர் மற்றும் வன்முறையைத் தூண்டுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த பாதுகாப்புப் பணிகளுக்காக மட்டும் சுமார் 4.5 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 45 கோடி ரூபாய்) செலவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு, வெளிநாடுகளில் இருந்து இந்த வன்முறைப் போராட்டங்களில் பங்கேற்க வந்த ஏழு தீவிரவாதப் பேச்சாளர்களுக்குத் தடை விதித்துள்ளது. வெறுப்புணர்வைப் பரப்பி சமூக அமைதியைக் குலைப்பவர்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரஃபல்கர் சதுக்கம் (Trafalgar Square) போன்ற பொது இடங்கள் அன்றைய தினம் முற்றிலுமாக மூடப்பட்டிருக்கும். ஒருபுறம் இனவாதத்திற்கு எதிரான கோஷங்களும், மறுபுறம் பாலஸ்தீன விடுதலைக்கான முழக்கங்களும் ஒலிக்கவுள்ள நிலையில், சனிக்கிழமை லண்டன் நகரம் மிகுந்த பதற்றத்துடனேயே விடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.