மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்ளைச் சம்பவம் குறித்து மதுரை காவல்துறையினர் ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வரும் 25 வயதான நிஷாந்த், தனி ஒரு ஆளாக நகைக்கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்த விதத்தை அந்த வீடியோவில் காவல்துறை விவரித்துள்ளது.
கொள்ளைச் சம்பவத்திற்கு முன்பாகக் கடையை நோட்டமிடும் நோக்கில், நிஷாந்த் மூன்று நாட்கள் வெவ்வேறு அடையாளங்களுடன் நகைக்கடைக்கு வந்து சென்றுள்ளதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை, ஏற்கனவே திட்டமிட்டபடி லிஃப்ட் வழியாகக் கடைக்குள் இறங்கிய அவர், தடயங்கள் சிக்காதவாறு முகமூடி மற்றும் கையுறை அணிந்து தங்கம் மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் கைகளில் இருந்த பச்சைக்குத்து அடையாளம் மூலம் நிஷாந்தை அடையாளம் கண்ட காவல்துறையினர், இந்த வழக்கில் தொடர்புடைய அவரது தந்தை சுரேஷ் மற்றும் தோழி மீனாட்சி ஆகியோரை ஏற்கனவே கைது செய்துள்ளனர். கொள்ளை நடந்த விதத்தையும் குற்றவாளிகளைக் கண்டறிந்த விதத்தையும் விளக்கும் வகையில் காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஏ.ஐ வீடியோ பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனாட்சி மற்றும் சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இருப்பிடத்தை மாற்றித் தலைமறைவாக உள்ள நிஷாந்தைப் பிடிக்கவும், மீதமுள்ள நகைகளை மீட்கவும் 9 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.