Posted in

ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை உறுப்பினராகிறதா கனடா? அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையும் மார்க் காரினியின் வரவேற்பும்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வரலாற்றுப்பூர்வமான முதல் ‘இணை உறுப்பினராக’ (Associate Member) கனடாவை இணைத்துக் கொள்வது குறித்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) விடுத்த முன்மொழிவை கனடா பிரதமர் மார்க் காரினி (Mark Carney) உற்சாகமாக வரவேற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தொடர்ச்சியான வர்த்தகக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இடையே, ஐரோப்பாவுடனான தங்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்ல கனடா தயாராகி வருகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உர்சுலா வான் டெர் லேயன், ஜனநாயகக் கொள்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் கனடாவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனக் கூறி இந்த அழைப்பை விடுத்தார். இதன் மூலம் வர்த்தகம், பாதுகாப்புத் தயாரிப்புகள், செயற்கை நுண்ணறிவு (AI), ஆர்க்டிக் ஆராய்ச்சி மற்றும் ஆற்றல் வளம் சார்ந்த துறைகளில் இரு தரப்பிற்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவான ‘எதிர்காலக் கூட்டணி’ உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை ஐரோப்பிய எம்பிக்கள் மற்றும் பிரதமர் மார்க் காரினி ஆகியோர் கைதட்டி வரவேற்றனர்.

அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு எதிரான ‘பகைமையான செயல்’ (Hostile Act) என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். வட கரோலினாவில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய முடிவை எடுத்தால், அவர்கள் மீது இதுவரை இல்லாத அளவிலான கடுமையான வ வரிகளை (Tariffs) விதிப்போம் அல்லது சில துறை சார்ந்த வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்துவோம்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போரைக் குறைத்துக்கொண்டு, ஐரோப்பிய நாடுகளுடனான பந்தத்தைப் பலப்படுத்த கனடா எடுத்துவரும் இந்த முயற்சி சர்வதேச அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முழுமையான உறுப்பினராக மாறாமல், இறைமையைத் தக்கவைத்துக்கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்பும் கனடாவின் இந்த ராஜதந்திர நடவடிக்கை, உலகளாவிய பொருளாதாரக் கூட்டணிகளின் எதிர்காலப் போக்கையே மாற்றியமைக்கும் எனக் கருதப்படுகிறது.