புதுடெல்லியில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘செமிகான் இந்தியா 2026’ (SEMICON India 2026) சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து உரைநிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் செமிகண்டக்டர் இலக்கு வெறுமனே கொள்கை முடிவுகளுடனும் தொழிற்சாலைகள் அமைப்பதோடும் நின்றுவிடாமல், வணிகரீதியான சில்லு (Chip) உற்பத்தி நிலைக்கு அதிவேகமாக முன்னேறியுள்ளதாகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இம்மாநாட்டில், உலகின் நம்பிக்கைக்குரிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச அளவில் விநியோகச் சங்கிலிகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தற்போதைய சூழலில், மின்னணு மற்றும் செமிகண்டக்டர் துறையில் இந்தியா அடைந்து வரும் வளர்ச்சி உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்தும் எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘செமிகான் 2.0’ (Semicon 2.0) திட்டத்தின் கீழ் ரூ.1.13 லட்சம் கோடிக்கும் ($13.5 Billion) அதிகமான நிதி ஒதுக்கீட்டில் செமிகண்டக்டர் வடிவமைப்பு, இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக விளக்கினார். ‘ரீஃபார்ம் எக்ஸ்பிரஸ்’ பாதையில் பயணிக்கும் இந்தியா, சர்வதேச நிறுவனங்கள் இந்திய ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான கதவுகளையும் திறந்துவிட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை ரூ.1.6 லட்சம் கோடி முதலீட்டில் 10 முக்கிய செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, அதில் மைக்ரான் (Micron), காய்ன்ஸ் (Kaynes) மற்றும் சிஜி செமி உள்ளிட்ட ஆலைகள் ஏற்கனவே வணிகரீதியான உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. இந்திய ஆலைகளில் தயாரிக்கப்பட்ட செமிகண்டக்டர் சில்லுகள் தற்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் கரங்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், செமிகண்டக்டர் துறைக்காக 1 லட்சம் பொறியியல் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் இலக்கில் ஏற்கனவே 70,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
“மணலில் தொடங்கி அமைப்புகள் வரை” (Silicon to Systems) என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் இந்திய செமிகண்டக்டர் மிஷன், 200-க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட்அப்கள் சொந்தமாகச் சில்லுகளை வடிவமைக்க நிதியுதவியும் நவீன கருவிகளையும் வழங்கி வருகிறது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களும், சர்வதேச முதலீட்டாளர்களும் இந்தியாவின் இந்தத் தொழில்நுட்பப் புரட்சியில் இணைந்து தற்சார்பு பாரதத்தை உருவாக்கப் பங்களிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.