பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டித் தமிழ்நாடு அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படும் ‘சமூக நீதி நாள்’ நிகழ்வையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலக உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து சமூக நீதி நாள் உறுதிமொழியை அவர் வாசித்து ஏற்றுக்கொண்டார்.
தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதலமைச்சர் விஜய் முன்னின்று உறுதிமொழியை வாசிக்க, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் திரண்டு நின்று அதனை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டனர். பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை மற்றும் சமத்துவச் சிந்தனைகளை எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதன் அவசியத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது.
உறுதிமொழி ஏற்பின் போது, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்; சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன்” என முழங்கப்பட்டது.
மேலும், மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றி, சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தை அமைத்திட உறுதியேற்பதாக முதலமைச்சர் தலைமையில் அனைவரும் உறுதிபூண்டனர். பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்நிகழ்ச்சி உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.