தமிழகச் சட்டமன்றத்தில் இன்று தவெக அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) தாக்கல் செய்யப்படவுள்ள தவெக அரசின் கன்னி ‘வேளாண் நிதிநிலை அறிக்கை’ மீது மாநிலத்தின் விவசாயப் பெருமக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 1987-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் அமல்படுத்தப்பட்ட ‘கள் இறக்குவதற்கான தடை’யை நீக்கி, மீண்டும் கள் இறக்கப் புதிய தவெக அரசு அனுமதி வழங்குமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, ஆனைமலை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தெற்கு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை மற்றும் பனை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தென்னை மரங்களைத் தாக்கி வரும் நோய்களாலும், கொப்பரைத் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததாலும் தென்னை விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இயற்கை பானமான கள்ளிற்கு அனுமதி அளித்தால் மட்டுமே தங்களது வாழ்வாதாரம் மீளும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
திராவிடக் கட்சிகளின் கடந்த 60 ஆண்டுகால ஆட்சியில் இக்கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை எனக் குற்றம் சாட்டும் தென்னை விவசாயிகள் சங்கம் மற்றும் தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர், மாற்று அரசியலைப் பேசுவதாகக் கூறும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, வேளாண் பட்ஜெட்டில் இத்திடீர் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிடும் என நம்புகின்றனர். கள் என்பது மதுபானம் அல்ல; அது ஒரு இயற்கை விவசாயக் உபபொருள் என்பதால், அதற்கு அனுமதி அளிப்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
கள் இறக்க அனுமதி வழங்குவது மட்டுமின்றி, நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு நேரடியாகக் கணக்கில் நிதியுதவி அளித்தல், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம், மற்றும் விவசாயக் கடன்களுக்கான சலுகைகள் ஆகியவையும் இந்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.ஜி.ஆர் போட்ட பழம்பெரும் சட்டத்தை ரத்து செய்து தென்னை விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் நிறைவேற்றுவாரா என்பது வேளாண் பட்ஜெட் உரையில்தான் தெரியவரும்.