சென்னை: தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசுத் துறைகளில் நிலவும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத் துறையில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார். அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை இந்து முன்னணி அமைப்பு முழு மனதாக வரவேற்றுள்ளது.
முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், “கோயில் சொத்துக்கள் மற்றும் நிதியில் எவ்வித ஊழலையும் தவெக அரசு சகித்துக் கொள்ளாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டது குறித்தும், நிதி நிர்வாகத்தில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், விரைவில் உண்மை நிலவரத்தை மக்கள் அறியும் வகையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்கச் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்து முன்னணி அமைப்பு, “ஆலய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது” எனக் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் கோயில் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, தொன்மையான சாமி சிலைகள் மற்றும் நகை ஆபரணப் பராமரிப்பில் நிகழ்ந்த குளறுபடிகள், வணிக வளாகங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடுகள் என அனைத்து விவகாரங்கள் குறித்தும் இந்த வெள்ளை அறிக்கையில் தெளிவான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே நிதித்துறை மற்றும் மின்சாரத் துறைகளில் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அறநிலையத் துறை வெளிப்படைத்தன்மையையும் தவெக அரசு கையில் எடுத்துள்ளது ஆன்மீகவாதிகள் இடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் எச்சரித்துள்ளதால், அறநிலையத் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.