தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், அதிகார துஷ்பிரயோகங்களைத் தடுக்கவும் முதலமைச்சர் விஜய் பல்வேறு அதிரடி விதிகளை வகுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, தவெக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கோயம்புத்தூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. சம்பத்குமார், தனது பெயரைப் பயன்படுத்தி எவரேனும் அரசு அலுவலகங்களில் சலுகை கோரினால் உடனடியாக அவர்களை நிராகரிக்குமாறு அதிகாரிகளுக்கு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அமைச்சராகப் பதவியேற்ற பிறகு கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள், அரசு மருத்துவமனை ஆய்வுகள் மற்றும் துறை சார்ந்த கூட்டங்களில் அமைச்சர் சம்பத்குமார் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கலந்தாய்வின் போது, “அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் யாராவது நான் சம்பத்குமாரின் நெருங்கிய சொந்தக்காரர், அவருடைய மாமா, மச்சான் என்று சொல்லி ஏதாவது காரியம் சாதிக்க முயன்றால், அவர்களை அடியோடு தள்ளி வையுங்கள்; எவ்வித சலுகையும் காட்ட வேண்டாம்” என்று கறாராகக் கூறியுள்ளார்.
பொதுவாகத் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம், புதிய அமைச்சர்களின் பெயர்களையும், அரசியல் செல்வாக்குகளையும் பயன்படுத்தி இடைத்தரகர்களும், போலி உறவினர்களும் அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதிப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. இத்தகைய முறைகேடுகளுக்குத் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் தவெக அரசு, அமைச்சர்களின் வாரிசுகளோ அல்லது உறவினர்களோ அரசு நிர்வாகத்தில் தலையிடுவதைத் தடுத்து வருகிறது. அமைச்சரின் இந்த நேர்மையான அணுகுமுறையை கோவை மாவட்ட அரசு அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவை சகாக்களுக்கு “மக்களுக்கான தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும், சுயநலப் போக்குகளுக்கு இடம் தரக்கூடாது” எனப் பிறப்பித்த ரகசிய உத்தரவின் அடிப்படையிலேயே அமைச்சர் சம்பத்குமார் இந்த தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. எளிய பின்னணியில் இருந்து வந்து அமைச்சராக உயர்ந்த சம்பத்குமாரின் இந்தத் தெளிவான மற்றும் கண்டிப்பான அறிக்கை, கோவை வட்டாரத்தில் உள்ள இடைத்தரகர்களுக்கு ஒரு சம்மட்டி அடியாக விழுந்துள்ளதுடன், தவெக-வின் ‘ஊழலற்ற தூய்மையான நிர்வாகம்’ என்ற வாக்குறுதியை உறுதிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.