Posted in

அப்பாவை அங்க தேடாதீங்க – அந்த Action-ஐ செய்து பதிலடி கொடுத்த ஸ்டாலின்..!

தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்தது. விவாதத்தின்போது திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்த நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் ஒரு ‘குட்டி ஸ்டோரி’ கூறினார். அதில், ஒரு சிறுவனிடம் முதியவர் ஒருவர் “உன் அப்பாவை எங்கே காணோம்?” என்று தேடுவதாகக் கூறி மறைமுகமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைக் கிண்டல் செய்தார். மேலும், கடந்த மார்ச் மாதம் மு.க.ஸ்டாலின் செய்து வைரலான கையைத் தட்டி வீசும் சைகையையும் (Viral Hand Gesture) சபாநாயகரின் அனுமதியோடு செய்து காட்டிப் பரபரப்பைக் கூட்டினார்.

முதலமைச்சர் விஜய்யின் இந்தத் தாக்குதலுக்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தற்போது பொதுமேடை ஒன்றில் மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பதிலடியைக் கொடுத்துள்ளார். “சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தம்பி உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், ‘உங்க அப்பாவை எங்கே காணோம்?’ என்று முதலமைச்சர் விஜய் கேட்கிறார். அப்பாவை அங்கே (சட்டமன்றத்தில்) தேடாதீர்கள், கலைஞர் பிள்ளையான இந்த ஸ்டாலின் மக்களின் மனங்களில் பதிந்திருக்கிறான்; மக்கள் மன்றத்தில் இருக்கிறான்” என்று கர்ஜித்தார்.

மேலும் தனது 60 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், “ஆட்சி இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாட்டு மக்களுக்காக உழைப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். நான் முதலமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் கோட்டைக்குச் சென்றதை விட, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 4, 5 முறை நேரில் சென்று மக்களைச் சந்தித்து ஆய்வு நடத்தியிருக்கிறேன். இவ்வளவு தூரம் எந்த முதலமைச்சராவது பயணம் செய்திருப்பார்களா?” என்று கேள்வி எழுப்பினார். தற்போதைய முதலமைச்சர் விஜய்க்கு சவால் விடுத்த அவர், “சந்தேகமிருந்தால் கோட்டையில் இருக்கும் கோப்புகளை (Files) எடுத்துப் பாருங்கள், என் கையெழுத்து அங்கே இருக்கும்” என்று சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்குப் பயன் தரும் திட்டங்களான மகளிருக்குக் கலைஞர் உரிமைத் தொகை 1000 ரூபாய் வழங்கும் கோப்பைப் பாருங்கள், அதில் ஸ்டாலின் இருப்பான். புதுமைப் பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் என எல்லாவற்றிலும் இந்த மு.க.ஸ்டாலினின் கையெழுத்துதான் இருக்கும். பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டிற்குப் பெயர் சூட்டியதே தன் வாழ்நாளுக்குப் போதும் என்றார். அதுபோல, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் மக்களின் முதலமைச்சராக நீடிப்பான்” என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசி விஜய்யின் நக்கல் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.