நீட் தேர்வு ரத்து மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை (EWS) எதிர்த்துத் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த பிரச்சாரப் பயணத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு கடைசி நிமிடத்தில் அனுமதி மறுத்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாரைத் தனது கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தி.க-வின் சமூகநீதிப் பிரச்சாரப் பயணத்திற்குத் தடை விதித்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் திடல் பகுதியில் இருந்து புறப்படவிருந்த இந்தப் பிரச்சார வாகனப் பயணத்தைத் தடுப்பதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழகத் தலைமையகத்தில் அதிகாலை முதலே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சென்னை காவல்துறையின் இந்தத் திடீர் நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், ஜனநாயக முறையில் அறவழியில் நடைபெறவிருந்த அமைதியான பிரச்சாரப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகத் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி லட்சியத்திற்காகவும் குரல் கொடுக்கும் அமைப்புகளின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதுதான் தவெக அரசின் திராவிட மாடலா?” எனக் கேள்வி எழுப்பினார். சமூகநீதிக் கொள்கைகளுக்காகத் தந்தை பெரியார் தொடுத்த போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்த விழிப்புணர்வுப் பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்குத் தடை விதித்திருப்பது தவெக அரசின் கொள்கை முரண்பாட்டை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சப்போவதில்லை என்றும், திட்டமிட்டபடி மக்களிடம் சமூகநீதிக் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் பிரசாரங்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் திராவிடர் கழகத்தினர் அறிவித்துள்ளனர். அரசு விதித்த இந்தத் திடீர் தடையைக் கண்டித்துப் பல்வேறு முற்போக்கு இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் கண்டனக் குரல்களை எழுப்பி வருவதால், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதம் உருவாகியுள்ளது.