Posted in

உலகை சுற்றி வலம் வரும் ஏலியன்கள்: நாசா வெளியிட்ட வீடியோக்களால் சர்சை !

பிரபஞ்சத்தில் மனிதர்களைத் தவிர வேற்றுக்கிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் (Aliens) என்று கூறப்படும் விசித்திர உயிரினங்கள் நடமாட்டம் உள்ளதா என்ற பல தசாப்த கால கேள்விக்கு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் (NASA) புதிய தலைவர் ஜாரெட் ஐசக்மேன் (Jared Isaacman) அதிரடியான சில உண்மைகளை உடைத்துள்ளார். சமீபத்தில் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் (FOX News) ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இதுவரை அமெரிக்கப் பாதுகாப்புப் படை மற்றும் உளவு அமைப்புகளால் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த விசித்திர பறக்கும் தட்டுகள் (UFO) மற்றும் விவரிக்க முடியாத விண்வெளி நிகழ்வுகள் (UAP) தொடர்பான ரகசியக் கோப்புகள், அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகப் பல்வேறு அரசு உளவு முகமைகள் இந்த விசித்திர நிகழ்வுகளைத் தீவிரமாக ஆராயாமல் அலட்சியப்படுத்தி மூடி மறைத்துள்ளன என்ற திடுக்கிடும் உண்மையையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி உத்தரவின் பேரில், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ‘பூர்சூ’ (PURSUE) என்ற புதிய திட்டத்தின் கீழ் ‘WAR.GOV/UFO’ என்ற பிரத்யேக இணையதளப் பக்கத்தைத் தொடங்கி, இதுவரை ரகசியக் காப்பகங்களில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள் மற்றும் வீடியோக்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது. இந்த ஆவணங்கள் குறித்துப் பேசிய நாசா தலைவர் ஜாரெட் ஐசக்மேன், “இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் கோப்புகளில் வேற்றுக்கிரகவாசிகளின் உடல்களோ அல்லது நொறுங்கி விழுந்த விண்கலங்களோ விவரிக்கப்படவில்லை. ஆனால், நவீன ராணுவ சென்சார்கள் மற்றும் ரேடார்களில் பதிவான, அறிவியலால் இதுவரை விளக்க முடியாத மர்மமான விசித்திரப் பொருட்கள் (Real Unexplained Phenomena) உலகம் முழுவதும் பறந்திருப்பது நூறு சதவீதம் உண்மை” என்று உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 2023-ல் லேக் ஹூரான் பகுதியில் அமெரிக்க எஃப்-16 போர் விமானம் ஒன்று வைரம் போன்ற வடிவிலான மர்மப் பொருளைச் சுட்ட வீழ்த்திய இன்ஃப்ராரெட் வீடியோக்கள் மற்றும் அப்பல்லோ, ஜெமினி விண்வெளிப் பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் நேரில் கண்ட மர்ம ஒளிகள் குறித்த ஆவணங்கள் இந்தத் தொகுப்பில் வெளியாகி உலகை அதிரவைத்துள்ளன.

கடந்த காலங்களில் நிலவிய பனிப்போர் (Cold War) சூழல், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் அதிநவீன ராணுவ ரேடார் தொழில்நுட்பங்களின் ரகசியங்கள் கசிந்துவிடக் கூடாது என்ற பயத்தின் காரணமாகவே, இந்த யுஎஃப்ஒ தொடர்பான கோப்புகள் பல தசாப்தங்களாகப் பென்டகன் மற்றும் சிஐஏ (CIA) போன்ற உளவு அமைப்புகளின் ரகசியத் தரவுத்தளங்களில் (Databases) ஆழப் புதைக்கப்பட்டிருந்தன. மேலும், இந்த விசித்திர நிகழ்வுகளைப் பொதுவெளியில் ஒப்புக்கொண்டால் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சம் அல்லது வதந்திகள் பரவக்கூடும் என்றும், அரசு நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றும் முந்தைய அமெரிக்க அரசுகள் பயந்ததே இந்த மூடிமறைப்புக்கு முக்கியக் காரணம் என்று நாசா வட்டாரங்கள் விமர்சித்துள்ளன. ஆனால், தற்போதைய அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் பிறப்பித்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ (FBI), சிஐஏ மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவை தங்களின் காப்பகங்களை அலசி ஆராய்ந்து இந்த அதிர்வெடித் தகவல்களை வெளியிடத் தொடங்கியுள்ளன.

நாசா தலைவர் ஐசக்மேன் இந்த விவகாரத்தை வெறும் ஏலியன் கதையாகப் பார்க்காமல், அறிவியல் ரீதியான தரவுப் பரிசோதனையாகவே அணுகுகிறார். “இன்று ஒவ்வொரு குடிமகனின் கையிலும் கேமரா போன்கள் உள்ளன; ராணுவ விமானங்களில் லட்சக்கணக்கான சென்சார்கள் உள்ளன. எனவே, வான்வெளியில் நகரும் ஒவ்வொரு மர்மப் பொருளும் துல்லியமாகப் பதிவாகிறது. இப்போது வெளியிடப்பட்டுள்ள கோப்புகளைப் பொதுமக்கள் மற்றும் சுயாதீன விஞ்ஞானிகள் ஆராய்ந்து தங்களின் கருத்துக்களைக் கூறலாம்” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அடுத்த சில வாரங்களில் சிஐஏ மற்றும் இதர உளவு அமைப்புகளிடமிருந்து இன்னும் பல அதிரடியான யுஎஃப்ஒ ரகசியக் கோப்புகள் அடுத்தடுத்த கட்டங்களாக வெளியாக உள்ளதால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் தற்போதைய அமெரிக்காவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெளிப்படைத்தன்மை நகர்வை உற்றுநோக்கத் தொடங்கியுள்ளன.