பிரபஞ்சத்தின் மர்மங்களான கரும் ஆற்றல் (Dark Energy), இருண்ட பருப்பொருள் (Dark Matter) மற்றும் சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள்களைக் (Exoplanets) கண்டறியும் நோக்கில், நாசா (NASA) தயாரித்துள்ள ‘நான்சி கிரேஸ் ரோமன்’ (Nancy Grace Roman Space Telescope) விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் சக்திவாய்ந்த ‘பால்கன் ஹெவி’ (Falcon Heavy) ராக்கெட் மூலம் இந்த அதிநவீனத் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.
நாசாவின் முதல் தலைமை வானியலாளரும், ‘ஹப்பிளின் தாய்’ (Mother of Hubble) என்று அழைக்கப்படுபவருமான நான்சி கிரேஸ் ரோமனின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்வெளித் தொலைநோக்கி, பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘L2’ (Sun-Earth Lagrange Point 2) சுற்றுப்பாதையை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. அங்கு சென்றடைய சுமார் 90 நாட்கள் ஆகும் நிலையில், 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இது தனது முதல் விண்வெளிப் புகைப்படங்களை அனுப்பத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹப்பிள் தொலைநோக்கியைப் போன்ற 2.4 மீட்டர் விட்டம் கொண்ட முக்கியக் கண்ணாடியைக் கொண்டுள்ள போதிலும், ‘நான்சி கிரேஸ் ரோமன்’ தொலைநோக்கி ஹப்பிளைக் காட்டிலும் 100 மடங்கு பரந்த விண்வெளிப் பகுதியை ஒரே நேரத்தில் படம் பிடிக்கும் திறன் கொண்டது. இதிலுள்ள 300.8 மெகாபிக்சல் ‘ஒய்டு ஃபீல்ட் இன்ஸ்ட்ரூமென்ட்’ (Wide Field Instrument – WFI) கருவி மூலம், பிரபஞ்சத்தின் பல பில்லியன் விண்மீன்கள் மற்றும் விண்மீன் திரள்களைக் (Galaxies) மிகக் குறுகிய காலத்தில் துல்லியமாகக் வரைபடமாக்க முடியும்.
ஏற்கனவே விண்வெளியில் செயல்பட்டு வரும் ஜேம்ஸ் வெப் (JWST) மற்றும் ஹப்பிள் தொலைநோக்கிகளுக்குப் போட்டியாக இல்லாமல், அவற்றிற்குத் துணையாக இந்த ரோமன் தொலைநோக்கி செயல்படும். ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஒரு குறிப்பிட்ட விண்வெளிப் பொருளை ஆழமாக ஆராயும் என்றால், ரோமன் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான பரப்பளவை ஒரே பார்வையில் ஆய்வு செய்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கான வழியை விஞ்ஞானிகளுக்குத் திறந்துவிடும் என நாசா தெரிவித்துள்ளது.