வடக்கு சைப்ரஸ் (North Cyprus) கடற்கரைக்கு அருகே 267 பயணிகளுடன் பயணித்த சொகுசுப் பயணிப் படகு (Catamaran Ferry) ஒன்று திடீரென நீரில் மூழ்கி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர சம்பவத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், கடலில் மாயமான 23 பேரை மீட்பதற்காக ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்புப் படகுகள் மூலம் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
வடக்கு சைப்ரஸின் முக்கியமான துறைமுக நகரான கிரினியாவிலிருந்து (Kyrenia / Girne) துருக்கியின் மெர்சின் மாகாணத்தில் உள்ள தசுக்கு (Tasucu) துறைமுகத்தை நோக்கி இந்த படகு புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, துறைமுகத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் படகின் உடற்பகுதிக்குள் கடல் நீர் திடீரென அதிரடியாகப் புகத் தொடங்கியதால், படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் வடக்கு சைப்ரஸ் மற்றும் துருக்கியின் கடலோரக் காவல் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுவரை 237 பயணிகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக வடக்கு சைப்ரஸ் பிரதமர் உனல் உஸ்டெல் (Ünal Üstel) அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் காயமடைந்த பலர் நிக்கோசியா அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைதியான வானிலை நிலவியபோதிலும், படகிற்குள் நீர் புகுந்ததற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனத் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது பயணிகள் உயிா்காக்கும் உடைகளை (Life Jackets) அணிந்தபடி கவிழ்ந்த படகின் மீது தஞ்சமடைந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. 43 ஆண்டுகால பிராந்திய வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படுவதால், சைப்ரஸ் பகுதியில் பெரும் சோகம் சூழ்ந்துள்ளது.