Posted in

கடலடி கேபிள்களை அழிக்க ரகசிய ஆயுதம்? – ரஷ்யாவின் நாசவேலைத் திட்டத்தை முறியடித்த அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள்!

ஆர்க்டிக் பெருங்கடலின் ஆழமான கடல் பகுதியில் உலகளாவிய இணையம் மற்றும் தகவல் தொடர்புக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் கடலடி கேபிள்களைச் சுவடு தெரியாமல் அழிப்பதற்காக ரஷ்யா தயாரித்த புதிய ரகசிய ஆயுத சோதனையை, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் நோர்வே படைகள் இணைந்து அதிரடியாக முறியடித்துள்ளன.

ஆர்க்டிக் பகுதியில் உள்ள ஸ்வால்பார்டு (Svalbard) தீவுக்கூட்டத்தின் அருகே கடல் மட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் ரஷ்யாவின் சிறப்பு ‘GUGI’ நீர்மூழ்கிப் பிரிவு படகுகள் இந்த ஆபத்தான சோதனையில் ஈடுபட்டன. எந்தவித ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் கடலடி ஃபைபர் ஆப்டிக் கேபிள்களைத் துண்டிக்கும் அதிநவீன தொழில்நுட்பத்தை ரஷ்யப் படைகள் பயன்படுத்த முற்பட்டபோது, நேட்டோ அமைப்பின் கண்காணிப்புப் படைகள் அதைத் துல்லியமாகக் கண்டறிந்தன.

இதையடுத்து, பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் நோர்வே கடற்படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அவற்றின் ரகசியப் பயிற்சியைத் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேறச் செய்தன. இந்த மோதலின் போது கேபிள்கள் எதுவும் சேதமடையவில்லை என்ற போதிலும், ரஷ்யாவின் இந்தச் செயல் நேட்டோ நாடுகளின் ‘பிரிவு 5’ கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகப் பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளின் அத்தியாவசியக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து ரஷ்யா நடத்தி வரும் ரகசிய நாசவேலைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் இந்த ஆபத்தான திட்டத்தின் ஆதாரங்களை பிரிட்டிஷ் மற்றும் நோர்வே அதிகாரிகள் நேரில் மாஸ்கோவிடம் சமர்ப்பித்து எச்சரித்துள்ள நிலையில், கடல்சார் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க நேட்டோ படைகள் ஆர்க்டிக் பகுதியில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.