பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் தலைவரான ஷாஹிர் சியால்வி, லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்புடன் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்துார்’ தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் சாதாரணக் குடிமக்கள் அல்ல, அவர்கள் ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசார் ஆகியோரின் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், “பாகிஸ்தான் ராணுவம் முதல்முறையாக ஹபீஸ் சயீத் மற்றும் மசூத் அசாருக்காகப் போரிட்டது” என்று அவர் கூறியிருப்பது பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் சியால்வி மேலும் கூறுகையில், முரிட்கே (Muridke) மற்றும் பகவல்பூர் (Bahawalpur) ஆகிய பகுதிகளில் இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, கொல்லப்பட்டவர்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்காமல் “சுதந்திரப் போராட்ட வீரர்கள்” (Freedom Fighters) எனச் சித்தரிக்கப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுச் செயல்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்காகவே, மதக் குருக்களுக்குப் பதிலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் மத விவகார அதிகாரிகள் இறுதிச் சடங்குகளை முன்னின்று நடத்தியதாகவும், சீருடை அணிந்த ராணுவ வீரர்களே பயங்கரவாதிகளின் சடலங்களைச் சுமந்து சென்றதாகவும் அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, மே 7 அன்று இந்தியா ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அப்போது பாகிஸ்தான் தரப்பில் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்று சர்வதேச அளவில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு பாகிஸ்தான் தலைவரே, கொல்லப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் (Asim Munir) மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் ஆகியோரின் சார்பில் அதிகாரப்பூர்வ மலர் வளையங்கள் வைக்கப்பட்டதாகக் கூறியிருப்பது இந்தியாவின் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்துார்’ என்பது பயங்கரவாதக் கட்டமைப்புகளை அழிப்பதற்கான இந்தியாவின் ராணுவ வலிமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று நேற்று பாராட்டியிருந்தார். இந்தச் சூழலில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளே பயங்கரவாதிகளுக்கு “கார்ட் ஆஃப் ஹானர்” (Guard of Honour) வழங்கி கௌரவித்ததாகச் சியால்வி கூறியிருப்பது, பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள ஆழமான பிணைப்பை உலக நாடுகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு மீண்டும் நெருக்கடி முற்றியுள்ளது.