Posted in

பிரிட்டனை உலுக்கிய ‘stop the boats’ போராட்டம்: நைஜல் ஃபரேஜ் கடும் கண்டனம்!

பிரிட்டனின் மிகவும் பரபரப்பான சர்வதேசக் கடல் வழியான டோவர் (Dover) துறைமுகப் பகுதியை இலக்கு வைத்து, முகமூடி அணிந்த நூற்றுக்கணக்கான தீவிர வலதுசாரி எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் நடத்திய திடீர் முற்றுகைப் போராட்டத்தால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையிலான கடல்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ‘படகுகளை நிறுத்துங்கள்’ (Stop the boats) என்ற முழக்கத்துடன் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த அதிரடிப் போராட்டத்திற்குப் பிரிட்டன் அரசும் அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலையில் டோவர் துறைமுகத்திற்குச் செல்லும் ஏ20 (A20) முக்கிய நெடுஞ்சாலையில் கருப்பு உடை மற்றும் முகமூடிகளை (Balaclavas) அணிந்து வந்த திரளான இளைஞர்கள், வீதியை மறித்துக் கைகோர்த்து நின்றபடி வாகனங்களைச் செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் துறைமுகத்திற்குச் செல்ல வேண்டிய சரக்கு லாரிகள் மற்றும் பயணிகளின் வாகனங்கள் சுமார் 6 கிலோமீட்டர் (4 மைல்) தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. பிரிட்டனின் 33 சதவீத சர்வதேச வர்த்தகத்தைக் கையாளும் முக்கியத் துறைமுகம் முடங்கியதால், பி அண்ட் ஓ ஃபெர்ரிஸ் (P&O Ferries) கப்பல் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, வலதுசாரித் தலைவரும் ‘ரீஃபார்ம் யூகே’ (Reform UK) கட்சியின் தலைவருமான நைஜல் ஃபரேஜ் இப்போராட்டத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “சட்டவிரோதக் குடியேற்றத்தை நாங்கள் எதிர்த்தாலும், முகமூடி அணிந்துகொண்டு நாட்டின் வீதிகளில் இறங்கிப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் வர்த்தகத்தையும் முடக்குவது முற்றிலும் அருவருப்பானது (Disgusting) மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அவர் சாடியுள்ளார். இதேபோல் டோவர் தொகுதி தொழிற்கட்சி எம்.பி மைக் டாப், “இங்கிலாந்து-பிரான்ஸ் ஒப்பந்தத்தால் படகு வழிக் குடியேற்றம் 40% குறைந்துள்ள நிலையில், முட்டாள்தனமாகப் போராட்டம் நடத்துபவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்” என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

கென்ட் நகரக் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, நண்பகலுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதை அடுத்துத் துறைமுகத்தின் இயல்பு நிலை மெதுவாகத் திரும்பியது. அமைதியான வழியில் போராட ஜனநாயகத்தில் உரிமையிருந்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிட்டனில் சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான அரசியல் மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், டோவர் துறைமுகத்தில் நடந்த இந்த ரகளை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.