தமிழகச் சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, கையில் எந்தவிதக் குறிப்பேடுகளும் இல்லாமல் மக்கள் பிரச்சனைகளைத் துல்லியமாகப் பேசி, நேரமின்மையால் சபாநாயகர் சுருக்கமாக முடிக்குமாறு கூறிய அடுத்த நொடியே “நன்றி வணக்கம்” எனக் கூறி உரையை முடித்த திருத்துறைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) எம்.எல்.ஏ க.மாரிமுத்துவின் பேச்சு இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. தவெக வருகைக்குப் பிறகு அரசியலை உற்றுநோக்கத் தொடங்கியுள்ள Gen Z இளைஞர்கள், இவரைப் பற்றி கூகுளில் அதிகளவில் தேடி வருகின்றனர்.
சட்டமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களும் அமைச்சர்களும் தட்டச்சு செய்யப்பட்ட தாள்களைப் பார்த்துத் தள்ளாடும் தமிழில் உரை நிகழ்த்தும் சூழலில், எந்தத் தாளையும் பார்க்காமல் விவசாயச் சிக்கல்கள், கைத்தறி நெசவாளர்களின் கோரிக்கைகள் மற்றும் கடைநிலை ஊழியர்களின் பிரச்சனைகளைத் துல்லியமான புள்ளிவிவரங்களுடன் பேரவையில் முழங்கினார் மாரிமுத்து. இவரது ஆழமான உரப்பணியைக் கண்டு வியந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், “குறிப்பேதுமின்றி அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்துப் பேசும் உங்களின் களப்பணியை நாங்கள் பார்த்து வியக்கிறோம்” என அவையிலேயே பாராட்டுகளைப் பொழிந்தனர்.
பேரவையில் நேரம் கருதி பேச்சை முடிக்குமாறு சபாநாயகர் கோரியதும், எவ்விதத் தயக்கமுமின்றி உடனடியாக “நன்றி வணக்கம்” எனக் கூறிச் சிரித்த முகத்துடன் அமர்ந்த மாரிமுத்துவின் டைமிங் அணுகுமுறை இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘யார் இந்த மாரிமுத்து எம்.எல்.ஏ?’ எனச் சமூக வலைத்தளங்களில் தேடிய ஜென்-ஜி தலைமுறையினருக்கு அவரது அரசியல் பின்னணியும், எளிமையான வாழ்க்கையும் பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
இன்றைய அரசியல் சூழலில் பல எம்.எல்.ஏ-க்கள் சொகுசு கார்களிலும் மாடி வீடுகளிலும் வசித்து வரும் நிலையில், திருத்துறைப்பூண்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற மாரிமுத்துவின் மொத்த சொத்து மதிப்பே வெறும் ரூ.7 லட்சம் தான். சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லாமல் அரசு பேருந்திலேயே பயணிக்கும் இவர், மனைவியின் பெயரில் உள்ள சிறிய ஓலைக்குடிசை வீட்டிலேயே இன்றும் வசித்து வருகிறார்; இவரது மனைவியும் விவசாயக் கூலி வேலைக்கே சென்று வருகிறார். அரசு வழங்கும் இலவசக் காரைக்கூட வேண்டாம் என மறுத்து, சர்வ சாதாரண மனிதராக மக்கள் பணியாற்றி வரும் இவரின் எளிமை, தமிழக அரசியலில் புதிய முன்னுதாரணமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.