பெங்களூரு: ஸ்மார்ட்போன் மற்றும் அதிவேக இணைய இணைப்பு இல்லாத சாதாரண பட்டன் போன் (Feature Phone) பயனர்களும் இனி தடையின்றி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் ‘போன்பே யுபிஐ 123பே’ (PhonePe UPI 123Pay) என்ற புதிய ஆஃப்லைன் சேவையை போன்பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் சாதாரண மாடல் போன்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களுக்கு நேரடியாக யுபிஐ வசதியை வழங்கும் முதல் பெரிய மூன்றாம் தரப்புச் செயலி (TPAP) நிறுவனமாக போன்பே உருவெடுத்துள்ளது.
இந்த புதிய அம்சம் 2ஜி எஸ்.எம்.எஸ் (2G SMS) தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இணைய வசதி சுத்தமாக இல்லாத இடங்களிலும், நெட்வொர்க் சிக்னல் குறைவாக உள்ள கிராமப்புறங்களிலும் தடையின்றிச் செயல்படும். இதற்காக நோக்கியா, எச்.எம்.டி, லாவா மற்றும் ஐடெல் போன்ற முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் போன்பே ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஃபீச்சர் போன்களில் இந்தச் செயலி முன்பே நிறுவப்பட்டு (Pre-installed) பயனர்களுக்குக் கிடைக்கும்.
இச்சேவையின் மூலம் பயனர்கள் தங்களது வங்கிக் கணக்கை இணைத்து, மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி (UPI ID) வழியாகக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் அனுப்ப முடியும். மேலும், கேமரா வசதி கொண்ட பட்டன் போன்கள் மூலம் கடைகளில் உள்ள கியூஆர் (QR) குறியீடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது யுபிஐ ஐடி மூலமாகவோ வர்த்தகர்களுக்குப் பணம் செலுத்தலாம். இத்துடன் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்த்தல் மற்றும் முந்தைய பரிவர்த்தனை விவரங்களை அறியும் வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக யுபிஐ பயன்படுத்தும் எளிய பயனர்களுக்கு உதவும் வகையில், தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) குரல் உதவி மையத்தையும் போன்பே அறிமுகப்படுத்தியுள்ளது. “ஸ்மார்ட்போன் எல்லைகளைத் தாண்டி நாட்டின் ஒவ்வொரு கடைக்கோடி குடிமகனுக்கும் டிஜிட்டல் பொருளாதாரப் பலன்களைக் கொண்டு சேர்ப்பதே இதன் முதன்மை நோக்கம்” எனப் போன்பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சமீர் நிகம் தெரிவித்துள்ளார்.