இந்திய அரசியல் வரலாற்றில் 62 ஆண்டுகளாக அசைக்க முடியாததாக இருந்த மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் சாதனையை நடப்பு பிரதமர் நரேந்திர மோடி முறியடித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, 1952 முதல் 1964 வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக தொடர்ச்சியாக 4,398 நாட்கள் பதவி வகித்தார். ஆண்டுகள் பல உருண்டோடி, பல்வேறு பிரதமர்கள் வந்து சென்ற போதிலும் இந்த எண்ணிக்கையை யாராலும் நெருங்க முடியவில்லை. தற்போது அந்த நீண்ட கால வரலாற்று சாதனையை பிரதமர் மோடி மாற்றி எழுதியுள்ளார்.
2026 ஜூன் 10-ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக் காலத்தில் தொடர்ச்சியாக 4,399 நாட்களை நிறைவு செய்து, இந்தியாவில் மிக நீண்ட காலம் தொடர்ச்சியாக பதவி வகித்த பிரதமர் என்ற புதிய சரித்திர மைல்கல்லை எட்டியுள்ளார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து தேசிய அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அதன்பின் 2019 மற்றும் 2024 ஆகிய பொதுத்தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டார்.
பிரதமர் மோடியின் இந்த 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தில் பணமதிப்பிழப்பு, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து (சட்டப்பிரிவு 370), கொரோனா கால பேரிடர் நிர்வாகம், சந்திராயன்-3 விண்கல வெற்றி, ஜி20 (G20) உச்சி மாநாட்டு தலைமை மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற பல உலகளாவிய முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின இத்தகைய சவால்கள் மற்றும் சாதனைகளுக்கு மத்தியிலும், உலக அரங்கில் இந்தியாவின் புதிய அடையாளத்தை உருவாக்குவதில் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டது.
பிரதமர் மோடியின் இந்த அரிய சாதனையை அவரது ஆதரவாளர்கள் மக்களின் தொடர்ச்சியான நம்பிக்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகள் இதனை அரசியல் ரீதியாக வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றன. எவ்வாறாயினும், 1964-ல் நேருவின் மறைவோடு நிறுத்தப்பட்டிருந்த இந்த நீண்ட கால ஆட்சி வரலாற்றுப் பதிவு, 62 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ல் மோடியால் மீண்டும் மாற்றி எழுதப்பட்டு இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியப் பக்கமாக மாறியுள்ளது.