தேசியத் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற 11-வது நிதி ஆயோக் (NITI Aayog) நிர்வாகக் குழுக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் சி.ஜே.விஞய் முதன்முறையாகப் பங்கேற்றுத் தமிழகத்தின் முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசியுள்ளார் . புது தில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவன் கலாசார மையத்தில் நடைபெற்ற இந்த அதிமுக்கியக் கூட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமை தாங்கினார் இதில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்ட வேளையில், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு விஜய் பங்கேற்கும் முதல் தேசிய அளவிலான முக்கியக் கூட்டம் இது என்பதால் ஒட்டுமொத்த இந்திய அரசியலின் பார்வையும் இதன் மீது திரும்பியுள்ளது .
இந்தக் கூட்டத்தில் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில், ‘வளர்ந்த இந்தியா’ (Viksit Bharat) என்ற இலக்கை எட்டுவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தனது தொடக்க உரையில் வலியுறுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், தமிழக முதலமைச்சர் விஜய்யின் கோரிக்கைகளுக்குப் பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து, மாநிலத்தின் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்ற முக்கிய சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தக் கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்றிரவு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் அளிக்கும் சிறப்பு இரவு விருந்திலும் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார் .
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் வலுவாக முன்வைத்தார். குறிப்பாக, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதிப் பகிர்வை உடனே விடுவிக்க வேண்டும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும், மற்றும் மாநில நெடுஞ்சாலைப் பணிகளை மேம்படுத்தக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை அவர் பட்டியலிட்டார். மேலும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, காரிஃப் பருவத்திற்கான உர விநியோகம் எவ்விதத் தடையுமின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, தனது டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், இன்று நாட்டின் மிக முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கும் நிதி ஆயோக் மேடையில் பிரதமர் மோடியுடன் நேரடியாகத் தமிழகத்தின் தேவைகள் குறித்துப் பேசியுள்ளது அவரது அரசியல் ஆளுமையின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த டெல்லி பயணத்தின் மூலம் மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணி, அதே வேளையில் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழ்நாட்டிற்கான திட்டங்களைப் பெற்றுத் தருவதில் தவெக அரசு தீவிரமாக உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.