தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே. அண்ணாமலை, அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற மக்கள் இயக்கத்தைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றும் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தச் சூழலில், அண்ணாமலை தொடங்கவுள்ள புதிய அரசியல் கட்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகனான விசாகன் வணங்காமுடி இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் அண்ணாமலையை நேரில் சந்தித்த விசாகன், அவருடன் நீண்ட நேரம் அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் திடீர் சந்திப்பைத் தொடர்ந்து, அண்ணாமலையின் புதிய கட்சியில் விசாகன் அதிகாரப்பூர்வமாக இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவுள்ளார் என்ற செய்திகள் கசிந்துள்ளன. மேலும், கட்சியாக உருவெடுக்கும் இந்த அமைப்பில் விசாகனுக்கு ‘பொதுச்செயலாளர்’ அல்லது அதற்கு நிகரான மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அண்ணாமலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2020-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டிருந்தபோது, அதில் இணையுமாறு அண்ணாமலைக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் மீது எப்போதும் தனிப்பட்ட மதிப்புக் கொண்டுள்ள அண்ணாமலை, தற்போது அவரது மருமகனைத் தனது அணியில் சேர்ப்பதன் மூலம் தமிழகத்திலுள்ள லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்களின் ஆதரவையும், அவர்களின் வாக்கு வங்கியையும் தன்பக்கம் ஈர்க்கப் பெரிய அளவில் காய் நகர்த்தி வருகிறார்.
தமிழகத்தில் அண்மையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு அதில் முழு திருப்தி இல்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழலில், அண்ணாமலையின் புதிய கட்சியில் ரஜினியின் மருமகன் முக்கியப் பொறுப்பேற்றால், அது தமிழகத்தில் ஆளுங்கட்சியான தவெக-விற்கு எதிராக ஒரு வலுவான மாற்று அரசியல் சக்தியாக உருவெடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நகர்வு, தமிழகத்தின் அடுத்தகட்ட அரசியல் களத்தை மேலும் சுவாரசியமாக்கியுள்ளது.