Posted in

“டெத் ஹேண்ட்” அணுஆயுத பதுங்குகுழி; உலகை அழிக்கும் புடினின் அதிர்ச்சித் திட்டம் வெளிச்சத்திற்கு!

உலகப் போர் அல்லது அணுஆயுதத் தாக்குதல் ஏற்பட்டால் ரஷ்யாவின் அணுஆயுதப் படைகளைத் தானியங்கி முறையில் இயக்கும் ‘டெத் ஹேண்ட்’ (Dead Hand) என அழைக்கப்படும் மிகவும் ரகசியமான ‘டோம்தே’ (Doomsday) அணுஆயுத பதுங்குகுழியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தீவிரமாக மறுசீரமைத்து புதுப்பித்து வருவதாகச் செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்களுடன் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் யூரல்ஸ் (Urals) பகுதியில் உள்ள யமந்தாவ் (Yamantau) மலைக்கு அடியில் அமைந்துள்ள இந்த அதிநவீன சுரங்க பதுங்குகுழி வளாகம், சோவியத் யூனியன் காலத்தில் கட்டப்பட்டது. ரஷ்யாவின் உச்சக்கட்ட தலைமை முடக்கப்பட்டாலும் அல்லது அழிக்கப்பட்டாலும் கூட, இந்த அமைப்பின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி வழிமுறைகள் மூலம் ரஷ்யாவின் அனைத்து அணுஆயுத ஏவுகணைகளையும் எதிரி நாடுகளுக்கு எதிராகத் தானாகவே ஏவக்கூடிய திறன் கொண்டது இந்த ‘டெத் ஹேண்ட்’ அமைப்பாகும்.

சமீபத்திய செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்களின்படி, இந்த ரகசியப் பதுங்குகுழியில் கூடுதல் சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு, வான்வழித் தாக்குதல்களைத் தாங்கும் வகையிலான கவசக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அங்குள்ள உள்கட்டமைப்புகள் அதிநவீன டிஜிட்டல் தொடர்பு அமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையங்களுடன் இணைக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் நீடித்து வரும் சூழலிலும், மேற்கத்திய நாடுகளுடனான பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையிலும், புடின் நிர்வாகம் தனது ‘டெத் ஹேண்ட்’ தளத்தைப் புதுப்பிப்பது சர்வதேசப் பாதுகாப்பு அமைப்புகளுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. தற்காப்பு அரணாக மட்டுமின்றி, நேட்டோ நாடுகளுக்கு நேரடி எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் ரஷ்யா இந்த அணுஆயுதத் தயாரிப்புகளை முடுக்கிவிட்டுள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.