தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இதன் முதற்கட்டமாக வரும் 19-ஆம் தேதி 1,100 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சர்வதேச மற்றும் தேசிய அளவில் விளையாடிய வீரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறினார்.
விளையாட்டு வீரர்களின் நலனுக்காகப் பிற மாநிலங்களுக்குச் செல்லும் தமிழ்நாடு அணி வீரர்களுக்கு விமானக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும், வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சீருடைகளைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறும் வகையில் காப்பீடு வழங்கப்பட உள்ளதாகவும், சிலம்பம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளித்துப் போட்டிகள் பிரிக்கப்பட உள்ளதாகவும் அவர் விவரித்தார்.
கடந்த 2005 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் 305 வீரர்களுக்கு மட்டுமே அரசு வேலை கிடைத்துள்ள நிலையை மாற்றி, இனி ஆண்டுக்கு 300 முதல் 400 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். அதேபோல, விளையாட்டுத் துறையில் போக்சோ வழக்குகளைத் தடுக்கும் நோக்கில் பயிற்சியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதோடு, அவர்களின் செயல்பாடுகளை இணையதளம் மூலம் கண்காணிக்கும் வசதியும் கொண்டு வரப்பட உள்ளது.
விளையாட்டுச் சங்கங்களின் தேர்தல் பிரச்சனைகளால் சான்றிதழ் பெறுவதில் வீரர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைக் களைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சிறப்புக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கான விடுதிகள் தயார் செய்யப்பட்டு வருவதுடன், கல்லூரிகளில் உடற்பயிற்சி வகுப்புகளை (PET Period) மீண்டும் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது.