Posted in

ட்ரோன்கள் நிறைந்த வானம் பாதுகாப்பற்றது – எச்சரித்த உக்ரைன்; ரஷ்யாவில் முடங்கிய விமானங்கள்!

ரஷ்யாவின் வான்வெளி இனி வணிக ரீதியிலான விமானப் போக்குவரத்திற்கு முற்றிலும் பாதுகாப்பற்றது என்றும், அங்கு ட்ரோன்களின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி சர்வதேச நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாகத் தினமும் 1,000 ட்ரோன்களை ரஷ்யாவை இலக்கு வைத்து அனுப்ப உத்தரவிட்டுள்ள நிலையில், “ட்ரோன்கள் நிறைந்த வான்வெளி சிவில் விமானங்களுக்கு உகந்த இடம் அல்ல” என அவர் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வெச்சரிக்கையைத் தொடர்ந்து, துருக்கியின் ‘பெகாசஸ்’ (Pegasus Airlines) உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் மொஸ்கோவின் வ்னுகோவோ விமான நிலையத்திற்கான தங்களது சேவைகளை உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளன. மேலும், ரஷ்ய வான்வெளியில் பறந்துகொண்டிருந்த சில விமானங்கள் நடுவானிலேயே திருப்பி விடப்பட்டதால், மொஸ்கோ மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமாகியோ அல்லது ரத்து செய்யப்பட்டோ ஆயிரக்கணக்கான பயணிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
ரஷ்யாவிற்குச் சேவை வழங்கி வரும் அனைத்து சர்வதேச விமான நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பயணிகள் தங்களின் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்தை உக்ரைன் நேரடியாக இலக்கு வைக்காது என்ற போதிலும், ரஷ்ய மண்ணில் நடத்தப்படும் தீவிர ட்ரோன் தாக்குதல்களால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால் ரஷ்ய வான்வெளி இனி பாதுகாப்பான ஒன்றாக இருக்காது என்றும் உக்ரைன் எச்சரித்துள்ளது.
ரஷ்யா தான் தொடங்கிய போரின் காரணமாகவே தங்களது சொந்த வான்வெளியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என விமர்சித்துள்ள செலென்ஸ்கி, சர்வதேச அமைப்புகளுக்கு இதுகுறித்த கூடுதல் பாதுகாப்புத் தகவல்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதேவேளையில், நிலைமையைச் சமாளிக்க மாற்று வழித்தடங்களை அமைத்து வருவதாக ரஷ்யப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ள போதிலும், வான்வெளியில் நிலவும் ட்ரோன் அச்சுறுத்தலால் சர்வதேச விமானப் போக்குவரத்து பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளது.