Posted in

பேனரை கிழித்ததால் ஆட்சி மாறியதா? ‘அணில் குஞ்சுகளோடு நிறுத்திக்கோங்க: ஆனந்திற்கு அதிமுக காரசார பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, கடந்த 2018-ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘சர்க்கார்’ திரைப்பட பேனர்களை அதிமுகவினர் கிழித்ததால்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்ததாக சுட்டிக்காட்டி அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், தங்களது அரசியல் பயணத்தையும் கடந்த கால சம்பவங்களையும் மேற்கோள்காட்டிப் பேசியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர் ஆனந்தின் இந்தப் பேச்சுக்கு அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசியல் புரிதலற்ற பேச்சுக்களை அவையில் பேசுவதை விடுத்து, துறை சார்ந்த விவாதங்களில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையே இல்லாமல் அதிமுகவைச் சீண்டும் வகையில் அவையில் பேசியதற்குத் தகுந்த எதிர்வினையை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் கண்டன அறிக்கையில், “விபரீத யோகத்தில் பதவிக்கு வந்துவிட்ட மாய மோகத்தில் அமைச்சர் வாய்க்கு வந்ததை அவையில் பேசியுள்ளார்” என்று சாடப்பட்டுள்ளது. திரைப்பட பேனர்களைக் கிழித்ததால் ஆட்சி மாறியது என்ற கூற்றைக் கடுமையாக எள்ளி நகையாடியுள்ள அதிமுக, “இத்தகைய அரசியல் கற்பனைகளையும் கதைகளையும் உங்களது அணில் குஞ்சுகளோடு (ரசிகர்களோடு) பேசிக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்; சட்டமன்றத்தில் இது போன்ற தேவையற்றப் பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும்” என காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளது.

திரைப்படப் பேனர் விவகாரத்தை மையமாக வைத்து சட்டமன்றத்தில் அமைச்சர் ஆனந்த் பேசியதும், அதற்கு அதிமுக வெளியிட்டுள்ள இந்த காரசாரமான பதிலடி அறிக்கையும் தமிழக அரசியல் களத்தில் புதிய காரசார விவாதத்தையும் பரபரப்பையும் தோற்றுவித்துள்ளது.