தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது எழும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கவும் புதிய ‘ஊழல் ஒழிப்புத் தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் அல்லது வெளிக்களப் பணிகளின் போது காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் தெரிவிக்க வசதியாக பிரத்யேகத் தொடர்பு எண்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் தனிப்பிரிவு, உயர் அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும். லஞ்சக் கோரிக்கைகள் அல்லது அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்தப் புகார்களை பொதுமக்கள் 78717 23000 என்ற பிரத்யேக அலைபேசி எண்ணிற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ உடனடியாகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது எவ்விதப் பக்கச்சார்புமின்றி உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கைகளும் சட்டபூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிக்கும் பொதுமக்களின் விவரங்கள் மற்றும் அடையாளங்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் காவல் துறை உறுதியளித்துள்ளது.
தலைநகர் சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஊழல் ஒழிப்புத் தனிப்பிரிவின் வெற்றிகரமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் துறைப் பிரிவுகளிலும் படிப்படியாக இத்தகைய சிறப்புப் பிரிவுகள் விரிவுபடுத்தப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.