சவுதி அரேபியாவில் குடியிருப்பு, தொழிலாளர் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக ஒரே வாரத்தில் 11,952 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். கடந்த நவம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட கூட்டுச் சோதனைகளின் முடிவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 6,163 பேர் குடியிருப்பு விதிகளை மீறியவர்கள், 3,225 பேர் எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியவர்கள் மற்றும் 2,564 பேர் தொழிலாளர் விதிகளை மீறியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இது தவிர, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற 1,653 பேரும், சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 29 பேரும், விதிமீறலாளர்களுக்குப் போக்குவரத்து மற்றும் தங்குமிடம் வழங்கிய 15 பேரும் பிடிபட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு உதவி செய்பவர்கள், தங்குமிடம் அல்லது போக்குவரத்து வசதி அளிப்பவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 1 மில்லியன் சவுதி ரியால் வரை அபராதமும் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், இத்தகைய குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் அவசர எண்களில் புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இதுவரை 11,418 பேர் அவரவர் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் (நாடு கடத்தப்பட்டுள்ளனர்). தற்போது 38,383 ஆண்கள் மற்றும் 2,379 பெண்கள் உட்பட மொத்தம் 40,762 வெளிநாட்டவர்கள் மீது சட்ட விதிகளை அமல்படுத்தும் நடைமுறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.