Posted in

மெக்கா நோக்கிய ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு – ஹூதிகளுக்கு சவுதி அரசு வீரிய எச்சரிக்கை

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவைக் குறிவைத்து ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட வெடிமருந்து நிரப்பிய ட்ரோனை சவுதி வான் பாதுகாப்புப் படையினர் வான்வெளியிலேயே சுட்டு வீழ்த்தி அழித்துள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து மெக்கா, ஜெட்டா மற்றும் தாயிஃப் உள்ளிட்ட நகரங்களில் முன்னெச்சரிக்கையாக அவசர ஆபத்து எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டதால் புனித நகரில் தற்காலிகப் பரபரப்பு நிலவியது.

சவுதி கூட்டுப் படை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி இத்தாக்குதல் குறித்துத் தெரிவிக்கையில், மெக்காவின் தடைசெய்யப்பட்ட வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்பே ட்ரோன் இடைமறித்து அழிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “இரு புனிதத் தலங்களின் பாதுகாப்பும் யாத்ரீகர்களின் பாதுகாப்பும் எங்களது சிவப்புக் கோடு (Red Line)” என்று எச்சரித்த அவர், புனித நகரைக் குறிவைத்து பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட ஹூதிகளுக்கு எதிராகக் கடுமையான மற்றும் தகுந்த பதிலடி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் முயற்சி நடைபெற்ற சில நிமிடங்களிலேயே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அவசர எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட போதிலும், பொதுமக்கள் தொடர்ந்து பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சவுதி சிவில் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. அதேவேளையில், மெக்காவைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகச் சவுதி முன்வைக்கும் குற்றச்சாட்டை ஹூதி அமைப்பின் அரசியல் பிரிவு நிர்வாகி ஹஸெம் அல்-அசாத் மறுத்துள்ளார்.

 

சமீபகாலமாகச் செங்கடல் பகுதி மற்றும் சவுதி எல்லைப்புற நகரங்கள் மீது ஹூதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், புனித நகரான மெக்கா அருகே ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) உட்படப் பல பன்னாட்டு அமைப்புகளும் தங்களின் பலத்த கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.