Posted in

₹100 கோடி தனியார் பள்ளி லஞ்ச வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிரடி சோதனை!

திமுகவின் முன்னணி நிர்வாகியும், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி தென்னூர் அண்ணா நகர் இல்லம் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவுடன் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மற்றும் சென்னை உட்பட மொத்தம் 6 இடங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி.டி. அரசகுமார் என்பவர் தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் மற்றும் தர உயர்த்தல் அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு பள்ளித் தலைமைகளிடம் ₹100 கோடிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகப் பெறப்பட்ட 117-க்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் அரசகுமாரைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசகுமார் நடத்திய சங்கத்தின் தொடக்க விழாவில் அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் கலந்துகொண்டதாகவும், இத்தகைய அனுமதிகளைப் பெற்றுத் தரப் பின்னணியில் துறை சார்ந்த அதிகாரிகளும் அமைச்சரும் உறுதுணையாக இருந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் சேகரிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், முறைகேடு தொடர்பாக மேலதிக ஆதாரங்களைத் திரட்டவே அன்பில் மகேஷின் இல்லத்தில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று காலை 7 மணி முதல் திருச்சி தென்னூர் இல்லத்தில் போலிஸ் பாதுகாப்புடன் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தகவலறிந்த திமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் அன்பில் மகேஷின் வீட்டின் முன்பாகப் பெருமளவில் குவிந்து வருகின்றனர். சோதனையின் முடிவிலேயே முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.