Posted in

உதய நிதி தொகுதியில் மற்றும் எடப்பாடியில் கூட TVK முன் நிலை: அதிரும் தகவல் !

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு ‘பூகம்பம்’ 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழ்ந்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. திமுக மற்றும் அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட தொகுதிகளில் கூட, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) ஏற்படுத்தியுள்ள தாக்கம், அந்தந்தக் கட்சித் தலைவர்களையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர், உதயநிதியின் சேப்பாக்கம், மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதி என விஐபி தொகுதிகள் அனைத்திலும் இந்த முறை வெற்றி என்பது அத்தனை எளிதல்ல என்ற Ground Report வெளியாகியுள்ளன.

குறிப்பாக, சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெக பக்கம் சாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சென்னை ஹார்பர் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் அசோக் இடையே வாக்குப்பதிவு தினத்தன்று நேரடியாக ஏற்பட்ட மோதல் மற்றும் வாக்குவாதம், அந்தத் தொகுதியில் தவெக எந்த அளவுக்கு திமுகவின் வெற்றியை உரசிப் பார்க்கிறது என்பதற்குச் சான்றாக அமைந்தது. அமைச்சர் சேகர்பாபுவின் சொந்தக் கோட்டையிலேயே தவெக வேட்பாளர் கடும் சவாலை அளித்துள்ளது திமுக வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மறுபுறம், அதிமுகவின் எஃகுக் கோட்டையாகக் கருதப்படும் எடப்பாடி தொகுதியில், தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தாலும், அங்கு நிலவும் அதிருப்தி ஓட்டுகள் மற்றும் மறைமுகமான அரசியல் நகர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்குச் சவாலாக மாறியுள்ளன. விஜய்யின் அரசியல் வருகை, வழக்கமாக திமுக-அதிமுக இடையே மட்டுமே சுழன்று கொண்டிருந்த வாக்குகளைத் திசைமாற்றியுள்ளதால், கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினுக்குக் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருவித நெருக்கடி நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.

மே 4-ஆம் தேதி முடிவுகள் வெளியாகும்போது, தமிழகத்தின் பல ‘பவர்ஃபுல்’ அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அதிர்ச்சி தோல்வியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 85 சதவீதத்திற்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குப்பதிவு, ஆளுங்கட்சியின் எதிர்ப்பு வாக்குகளா அல்லது விஜய்யின் புதிய அலைக்கா என்ற கேள்விக்கு விடை தேடி அரசியல் கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. திராவிடக் கட்சிகளின் ஜாம்பவான்களை ஆட்டம் காண வைத்துள்ள இந்த ‘விஜய் ஃபேக்டர்’ மே 4 அன்று ஒரு புதிய அரசியல் விடியலை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.