Posted in

21 கோடி கடனில் காங்கிரீட் சுவரா? பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபாதை ஏன்? சௌமியா அன்புமணி ஆவேசக் கேள்வி!

சென்னையின் இயற்கைக் வடிகாலாகத் திகழும் சர்வதேச ‘ராம்சார்’ அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ரூ.21 கோடி செலவில் 10 அடி அகலத்திற்கு காங்கிரீட் நடைபாதை மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் திட்டத்திற்குப் பாமக சட்டமன்ற உறுப்பினரும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இயற்கையான ஈரநிலத்திற்குள் இதுபோன்ற காங்கிரீட் கட்டுமானங்கள் தேவையா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெய்தல் மீட்சித் திட்டம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர் நீளத்திற்குத் தடுப்புச்சுவரும், 2 கிலோமீட்டர் நீளத்திற்கு 10 அடி அகல நடைபாதையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “மக்கள் யாருமே கேட்காத ஒரு திட்டத்திற்காக ரூ.21 கோடி கடன் வாங்கி, இயற்கையாக மழைநீரை உறிஞ்சும் சதுப்பு நிலத்திற்குள் காங்கிரீட் சுவர்களையும் நடைபாதையையும் எழுப்புவது பேரழிவிற்கே வழிவகுக்கும்” எனக் குற்றம்சாட்டினார்.

மழைக்காலங்களில் சென்னை மாநகருக்குள் வெள்ளம் சூழ்வதைத் தடுப்பதிலும், நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாப்பதிலும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஆனால், தற்போதைய தடுப்புச்சுவர் கட்டுமானங்கள் இயற்கை நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்தும் என்பதால், வரவிருக்கும் பருவமழையின் போது தென் சென்னை பகுதிகள் மீண்டும் மோசமான வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டின் சதுப்புநிலங்கள் பாதுகாப்பு விதிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இந்த நெய்தல் மீட்சி திட்டக் கட்டுமானப் பணிகளை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போன சதுப்பு நிலத்தின் எல்லைகளைத் துல்லியமாக வரையறை செய்து, எஞ்சியுள்ள ஈரநிலத்தை அதன் இயல்பு மாறாமல் பாதுகாக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.