Posted in

தியாகச் சுடர் திலீபனின் 39-வது ஆண்டு நினைவேந்தல்: யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வ அஞ்சலி செலுத்திய தமிழ் மக்கள்!

ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக உணவும் நீருமின்றி 12 நாட்கள் அகிம்சை வழியில் உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகதீபம் லெப்டினன்ட் கர்னல் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 39-வது நினைவேந்தல் தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் உணர்வுப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

கடந்த 1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், வீடமைப்பு மற்றும் புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில் திலீபன் உண்ணாநோன்பைப் போராட்டம் தொடங்கினார்.

சொட்டு நீரும் அருந்தாமல் தொடர்ச்சியாக 12 நாட்கள் அகிம்சை வழியில் உண்ணாநோன்புப் போராட்டத்தை முன்னெடுத்த திலீபன், தனது 23-வது வயதில் 1987 செப்டம்பர் 26 அன்று வீரமரணமடைந்தார். அவரது 39-வது நினைவேந்தலையொட்டி, நல்லூரில் புதிதாக நிறுவப்பட்டுள்ள திலீபனின் வெண்கலச் சிலைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு மலர்தூவிச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே பொத்துவிலில் தொடங்கித் தாயகப் பகுதிகள் வழியாக நல்லூர் வரை பயணித்த நினைவேந்தல் வாகன ஊர்வலத்திற்கும் மக்கள் வீதிகள் தோறும் திரண்டு அஞ்சலி செலுத்தினர். 39 ஆண்டுகள் கடந்தபோதிலும், ஈழத் தமிழர்களின் அகிம்சைப் போராட்ட வரலாற்றுச் சின்னமாகத் திகழும் திலீபனின் தியாக நினைவுகள் வடகிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களிடையே இன்றும் ஆழமாக நினைவு கூரப்பட்டு வருகிறது.