Posted in

கோவில்களுக்குள் செல்போனுக்கு தடை!  அறநிலையத்துறை ஆணையர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து முதன்மைத் திருக்கோயில்களிலும் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, கோயில்களின் ஆன்மீகச் சூழலையும் புனிதத்தன்மையையும் பாதுகாக்கும் நோக்கில் அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி. வினய் இதற்கான பிரத்யேகச் சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கோயில் வளாகத்திற்குள் சிலர் புகைப்படங்கள், வீடியோக்கள், செல்பிக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான ‘ரீல்ஸ்’ (Reels) எடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருவதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. இத்தகைய செயல்கள் இறைவழிபாடு செய்ய வரும் சாமானிய பக்தர்களுக்குப் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், கோயிலின் அமைதியான சூழலையும் சீர்குலைப்பதாகக் கண்டறியப்பட்டது. இதனைத் தடுக்கவே இந்த அதிரடிக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிமுறைகளின்படி, பக்தர்கள் தங்களது செல்போன்களைக் கோயில் நுழைவாயில் அல்லது காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகே அமைக்கப்படவுள்ள பிரத்யேகப் பாதுகாப்பு பெட்டகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதற்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டு ‘ITMS’ அமைப்பு மூலம் அதிகாரப்பூர்வ ரசீது வழங்கப்படும். மேலும், தடையை மீறி அனுமதியின்றி கோயிலுக்குள் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கோயில்களுக்கு வருகை தரும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களின் (VIP) தரிசனத்திற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஐபிக்கள் தங்களது வருகை குறித்து 24 மணி நேரத்திற்கு முன்பே ஆணையர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களின் வருகையின் போது சாமானிய பக்தர்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.