Posted in

ஒரே போடுதான்.. மொத்த பேரையும் முடிச்சிருக்கலாம்!; ஈரான் இறுதிச்சடங்கு குறித்து டொனால்ட் டிரம்ப் சர்ச்சை பேச்சு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் தலைநகர் தெஹ்ரானில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த துக்க நிகழ்வின் போது ஈரானின் ஒட்டுமொத்த முக்கியத் தலைவர்களும் ஒரே இடத்தில் கூடியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நினைத்திருந்தால் ஒரே தாக்குதலில் ஈரானின் ஒட்டுமொத்த தலைமையையும் எங்களால் வீழ்த்தியிருக்க முடியும்” எனப் பேசி சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

அமெரிக்க ஊடகமான ‘ஆக்சியோஸ்’ (Axios) நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் அதிபர் டிரம்ப் இக்கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “அவர்கள் அனைவரும் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள். ஒரே ஒரு ஷாட் (One Shot) மூலம் எல்லோரையும் ஒரே நேரத்தில் அமெரிக்காவால் காலி செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்யப் போவதில்லை; ஏனெனில், அவர்களை அழித்துவிட்டால் அதன் பிறகு அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்” என்று டிரம்ப் தனது வழக்கமான பாணியில் அதிரடியாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது மவுண்ட் ரஷ்மோர் (Mount Rushmore) பகுதியில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் தங்களுக்குப் பணிந்து வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். “நாங்கள் ஈரானை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளோம். அவர்கள் எப்படியாவது எங்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு வரத் துடிக்கிறார்கள். நாங்கள் இரக்கமுள்ளவர்கள் என்பதால் தான், அவர்களின் உச்சத் தலைவரின் இறுதிச்சடங்குகளை நடத்துவதற்காகப் பேச்சுவார்த்தைகளுக்கும் ராணுவ நடவடிக்கைக்கும் ஒரு வாரம் விடுமுறை (Week off) அளித்துள்ளோம்” என்றும் அவர் கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் இந்த திமிர்பிடித்த பேச்சுக்கு ஈரான் அரசு தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது. ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், “உங்களுக்கு நாகரிகம், வரலாறு, கௌரவம் என எதுவுமே இல்லாததால் தான் உங்களால் இதுபோன்ற உணர்வற்ற விஷயங்களைப் பேச முடிகிறது” எனப் பதிலடி கொடுத்துள்ளது. அதே நேரத்தில், தெஹ்ரானில் நடந்து வரும் கமேனியின் இறுதிச்சடங்கு மேடையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், கவிஞர் முகமது ரசூலி என்பவர் அதிபர் டிரம்ப் படுகொலை செய்யப்பட வேண்டும் எனப் பகிரங்கமாக முழக்கமிட்டதால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *