அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே வழங்கப்படும் பிறப்புரிமை குடியுரிமைச் (Birthright Citizenship) சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ‘பர்த் டூரிசம்’ (Birth Tourism) வணிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு புதிய நிர்வாக உத்தரவுகளில் (Executive Orders) கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இருப்பினும், கடந்த ஜூன் மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் அவரது முந்தைய உத்தரவை அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி ரத்து செய்தது. நீதிமன்றத் தீர்ப்பின் பின்னடைவைத் தொடர்ந்து, தற்போது புதிய அணுகுமுறையுடன் மீண்டும் இரண்டு நிர்வாக உத்தரவுகளைத் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
இந்த புதிய உத்தரவுகளின்படி, அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதற்காகவே வணிக நோக்கில் சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டிற்குள் வரும் கர்ப்பிணிப் பெண்களைத் தடுத்து நிறுத்துமாறும், அத்தகைய ‘பர்த் டூரிசம்’ முகவர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள், வெளிநாட்டு அரசாங்க ஊழியர்கள் மற்றும் அமெரிக்க எல்லைப் பகுதியில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களின் குழந்தைகளுக்குத் தானாகக் குடியுரிமை கிடைப்பதைக் கட்டுப்படுத்தும் பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
“பிறப்புரிமை குடியுரிமையை சிலர் ஒரு வணிகமாகவே மாற்றிவிட்டனர், இது முற்றிலும் தவறானது” என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் சாடியுள்ளார். இருப்பினும், அமெரிக்கச் சிவில் உரிமைகள் சங்கம் (ACLU) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகளும் சட்ட நிபுணர்களும் இந்த புதிய உத்தரவுகளும் அரசியலமைப்புக்கு எதிரானவை எனக் கூறி மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க ஆயத்தமாகி வருவதால், அமெரிக்காவில் இ விவகாரம் மீண்டும் சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது.