தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் பதவிப் போட்டி காரணமாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அக்கட்சியின் தொழிற்சங்க நிர்வாகி ஒருவரே சக நிர்வாகிகளால் பீர் பாட்டிலால் அடித்து, புளிய மரத்தில் முட்டி கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முத்துச்செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான ராஜ்குமார், தற்பொழுது திருப்பூர் மாவட்ட தவெக தொழிற்சங்க செயற்குழு உறுப்பினராகப் பதவி பெற்று தீவிரமாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவருக்குக் கட்சிக்குள் நற்பெயரும் முக்கியத்துவமும் கூடி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தவெகவின் மற்றொரு தரப்பு இந்த கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
பாதிக்கப்பட்ட ராஜ்குமாரின் தாய் ராதாமணி வெளியிட்டுள்ள கண்ணீர் வீடியோ வாக்குமூலத்தின்படி, திருப்பூர் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான அமீன், அவரது நண்பர்களான பிரீத்தி மற்றும் லோகேஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். ரங்காநகர் பகுதியில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றிலிருந்து பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து வந்து கொண்டிருந்த ராஜ்குமாரை வழிமறித்த இக்கும்பல், “உனக்கெல்லாம் எதுக்குடா மாவட்ட செயற்குழு பதவி? நீ எல்லாம் வெறும் பெஞ்சு தூக்கவும், கொடி பிடிக்கவும் மட்டும்தான் லாயக்கு; உன்னைத் தீர்த்துக்கட்டாமல் விடமாட்டோம்” என்று கூறி, பீர் பாட்டிலைத் தலையில் உடைத்து, தரதரவென்று இருட்டிற்குள் இழுத்துச் சென்று அடித்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியதோடு நிறுத்தாமல், ராஜ்குமாரின் ஆடைகளைக் கிழித்து, அவமானம் செய்யும் நோக்கில் புகைப்படம் எடுத்து தவெகவின் முக்கிய நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், “கட்சியின் பெயர் கெட்டுவிடும்” என்று பயந்து ராஜ்குமார் ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு வர மறுத்த நிலையில், மறுநாள் காலையில் கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால், அவரது தாய் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைத் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்குத் தீவிரப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகனின் நிலமையைக் கண்டு கதறும் தாய் ராதாமணி, அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகிகள் அமீன் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அமைதியாக இருக்கும் அவிநாசி பகுதியில் தவெக நிர்வாகிகளே இத்தகைய கொடூரக் கொலைகாரக் கும்பலாக மாறி வருவதாகவும், தன் மகனுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்தவொரு ஏழைத் தொண்டனுக்கும் நேரக் கூடாது என்றும், தவறு செய்தவர்கள் மீது தவெக தலைமையும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.