நவீனப் போர்க்களங்களில் ட்ரோன்களின் (Drones) பயன்பாடு முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. போர்க்கப்பல்களைக் கடலில் மூழ்கடிப்பது முதல் எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து அழிப்பது வரை, ‘சூப்பர் ட்ரோன்கள்’ இப்போது போர்முனையின் முதன்மை ஆயுதமாக மாறியுள்ளன. இந்தச் சூழலில், உக்ரைன் ராணுவம் பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன நீண்டதூரத் தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள இலக்குகள் மீது வெற்றிகரமாகத் தாக்குதல்களை நடத்தி வருவது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் உக்ரைன் படை பிரிட்டன் பாதுகாப்பு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யாவின் வோல்கோகிராட், யாரோஸ்லாவ் மற்றும் மாஸ்கோ பகுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் பிரபல BAE சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ‘நையான்’ (Nyan) ரக ஜெட் ட்ரோன்கள் மற்றும் 950 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பாயக்கூடிய மற்றொரு ரகசிய பிரிட்டன் ட்ரோன் ஆகியவை இத்தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோடிக்கணக்கில் செலவாகும் குரூஸ் ஏவுகணைகளுடன் ஒப்பிடுகையில், 50,000 முதல் 1,00,000 பவுண்டுகள் செலவில் தயாரிக்கப்படும் இந்த ட்ரோன்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பயனளிப்பதாக உள்ளன. அதிவேகக் கவண் (Catapult) அமைப்புகள் மூலம் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து ஏவப்படும் இத்தகைய ட்ரோன்கள், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் திணறடித்து தங்களது இலக்குகளைத் துல்லியமாகத் தாக்குகின்றன.
பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தி உக்ரைன் நடத்தி வரும் இந்த ஆழமானத் தாக்குதல்கள், ரஷ்யா-உக்ரைன் போரில் பிரிட்டனின் பங்களிப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதேவேளையில், தங்கள் நாட்டின் நிலப்பரப்பில் பிரிட்டன் தயாரிப்பு ட்ரோன்கள் மூலம் நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பிரிட்டன் மீது ரஷ்யா இணையவழித் தாக்குதல்கள் மற்றும் உளவு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தக்கூடும் என்ற அச்சமும் உலக நாடுகளிடையே உருவாகியுள்ளது.