பிரிட்டனில் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் தீவிர வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடிகள் (Balaclavas) மற்றும் முகத்தை மூடும் ஆடைகளை அணிவதற்கு உடனடியாகத் தடை விதிக்குமாறு பிரிட்டன் உள்துறைச் செயலாளர் (Home Secretary) ஷபானா மஹ்மூத் காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத் மற்றும் டூவர் ஆகிய துறைமுக நகரங்களில் முகமூடி அணிந்த நூற்றுக்கணக்கான தீவிர வலதுசாரி அமைப்பினர் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராகத் திடீர் போராட்டங்களில் ஈடுபட்டனர். முகமூடி மற்றும் கருப்பு ஆடைகளை அணிந்துகொண்டு பொதுமக்களையும் காவல்துறையினரையும் அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள், பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தினர். இந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகளுடன் உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய உள்துறைச் செயலாளர், அடையாளத்தை மறைத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். பிரிட்டனின் குற்றவியல் மற்றும் காவல் துறை சட்டத்தின் (Crime and Policing Act) கீழ் காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரங்களையும் பயன்படுத்தி, இதுபோன்ற போராட்டங்களில் முகமூடி அணிவதற்குத் தடை விதிக்க உத்தரவிட்டார். இந்தத் தடையை மீறி முகமூடி அணிபவர்களுக்கு 1,000 பவுண்ட் அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டங்களைக் கண்காணிக்கக் காவல் துறை சிறப்புப் படைகளை அமைத்துள்ளதுடன், முகமூடித் தடையை உடனடியாக அமல்படுத்தத் தயார் நிலையில் இருப்பதாகவும் மூத்த காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிர வலதுசாரிகளின் வன்முறையைக் கட்டுப்படுத்த பிரிட்டன் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.