மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) போர்க்கப்பலுக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் 2-வது முறையாக நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
கப்பலில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட படைவீரர்களிடையே தீவிர மனச்சோர்வு மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகரித்து வருவதாகக் கவலைகள் எழுந்த நிலையில் இந்த திடீர் விஜயம் மேற்கடிாள்ளப்பட்டுள்ளது. அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல் சுமார் 240 நாட்களுக்கும் மேலாக எவ்வித இடைவெளியுமன்றி இடைவிடாத கடற்படைப் பணியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாகக் கடலிலேயே முகாமிட்டுள்ளதால், வீரர்களுக்குத் தேவையான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீரர்களின் மன உறுதி மற்றும் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தனது 10 நாட்கள் கொண்ட மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக போர்க்கப்பலுக்குச் சென்ற அட்மிரல் பிராட் கூப்பர், அங்குள்ள கடற்படை வீரர்களை நேரில் சந்தித்துப் பேசினார். “நவீன வரலாற்றிலேயே மிகச் சவாலான மற்றும் ஆபத்தான ராணுவப் பணியாக இந்த நடவடிக்கை வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறும்” என அவர் வீரர்களிடையே உரை ஆற்றினார்.
மேலும், சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.நீண்டகாலப் போர்ப் பணி காரணமாக எழுந்துள்ள மன உளைச்சலைக் குறைக்க கப்பலுக்குக் கூடுதல் மனநல ஆலோசகர்களை அனுப்ப அமெரிக்கக் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், கடற்படை வீரர்களின் நிலைமை குறித்த குடும்பத்தினரின் தொடர் புகார்களை அடுத்து, விரைவில் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ கப்பலுக்குப் பதிலாக ‘யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன்’ போர்க்கப்பலை அங்கு அனுப்ப அமெரிக்கப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளது.