பயன்படுத்தப்பட்ட பழைய ஆடைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வதற்கான பிரபல ஐரோப்பிய ஆன்லைன் தளமான ‘வின்டெட்’ (Vinted) செயலியில், குழந்தைகள் கடத்தல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த தளத்தில் சாதாரண பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களின் விலை சுமார் 26,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 27 லட்சம் ரூபாய்) என மிக பிரம்மாண்டமான விலையில் பட்டியலிடப்பட்டு விளம்பரங்கள் வெளியாயின. இந்த அசாதாரண விலை பட்டியலைக் கண்ட நெட்டிசன்கள், ‘பொம்மைகள்’ என்ற பெயரில் திரைக்குப் பின்னால் குழந்தைகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறார்களோ என்ற அச்சத்தையும், சந்தேகத்தையும் சமூக ஊடகங்களில் எழுப்பியதை அடுத்து இப்பிரச்சினை உலகளவில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
டிக்டாக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (ட்விட்டர்) போன்ற சமூக ஊடக தளங்களில் வின்டெட் செயலியின் இந்த விசித்திரமான விளம்பர ஸ்கிரீன்ஷாட்டுகள் (Screenshots) தீயாய் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள ஆதாரங்களின்படி, அந்த விளம்பரங்களில் பொம்மைகளின் விபரங்கள் என்ற பெயரில் குறிப்பிட்ட வயது, உயரம், உடல் அளவு, பாலினம் மற்றும் இனம் சார்ந்த விபரங்கள் குறியீட்டு வார்த்தைகளாக (Coded language) பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சாதாரண ஆன்லைன் வர்த்தகம் அல்ல என்றும், சர்வதேச குழந்தைகள் கடத்தல் மற்றும் மனித வர்த்தகக் கும்பல் (Human Trafficking) இந்த ஆன்லைன் தளத்தை தங்களின் சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவியதைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு இந்த விளம்பரங்கள் குறித்து முதற்கட்ட விசாரணையை (Preliminary investigation) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர். இணையவழி சட்டவிரோத செயல்களைக் கண்காணிக்கும் பிரான்சின் தேசிய மையமான ‘பாரோஸ்’ (Pharos) அமைப்பிடம் இந்த விபரங்கள் ஒப்படைக்கப்பட்டு, தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இருப்பினும், வின்டெட் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்கள் தளத்தில் நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணையில் குழந்தைகள் கடத்தலுக்கான எந்தவொரு நம்பகமான ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், அது பயனர்களின் தவறான புரிதலால் எழுந்த வதந்தி என்றும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
வின்டெட் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “எங்கள் தளத்தில் பொம்மைகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வயது வரம்பு, அந்தப் பொம்மை எந்த வயதுக் குழந்தைகளுக்கானது என்பதைக் குறிக்கும் பொதுவான அம்சம் மட்டுமே தவிர, அது குழந்தைகளைக் குறிப்பது அல்ல” என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆன்லைன் தளத்தின் நற்பெயரைக் கெடுப்பதற்காக திட்டமிட்டே போலியான விளம்பரங்களை உருவாக்கிப் பரப்பும் கணக்குகளை உடனடியாக முடக்கி வருவதாகவும், பிரான்ஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த காலங்களில் வெஃபேர் (Wayfair) மற்றும் எட்ஸி (Etsy) போன்ற ஆன்லைன் தளங்களிலும் இது போன்ற ஆன்லைன் குழந்தை கடத்தல் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.