Posted in

சென்னைக்கு வருகிறது உலகத் தர பல்கலைக்கழகம்! முதல்வர் விஜய் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தம்

தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருப்புமுனையாக, ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான ‘மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்’ (University of Western Australia – UWA) தனது இந்திய வளாகத்தைச் சென்னையில் அமைக்கவுள்ளது. முதல்வர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது.

சென்னை வேளச்சேரியில் சுமார் 50,000 சதுர அடி பரப்பளவில் ரூ.125 கோடி முதலீட்டில் இந்தப் புதிய சர்வதேசப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய வழிகாட்டுதல்களின்படி தமிழ்நாட்டில் நிறுவப்படும் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகம் இதுவாகும். 1911-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2026-ஆம் ஆண்டின் கியூஎஸ் (QS) உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 77-வது இடத்தில் உள்ள இந்தப் பல்கலைக்கழக அமைப்பின் வருகை, உள்ளூர் மாணவர்களுக்குப் பன்னாட்டுத் தரத்திலான கல்வியை வழங்கி 200-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள ‘கைடன்ஸ் தமிழ்நாடு’ (Guidance Tamil Nadu) அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை மட்டுமின்றி உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஆராய்ச்சி மையம் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. சுவிட்சர்லாந்தின் ‘சப்’ (Chubb) நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் ‘நார்டெக்ஸ்’ (Nordex) நிறுவனம் ஆகியவை தங்களது R&D மற்றும் திறன் மையங்களைச் சென்னையில் அமைப்பதுடன், தென்கொரியாவின் ‘மோடிவ்லிங்க்’ நிறுவனம் காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கத்தில் ரூ.300 கோடியில் ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.

இந்த கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டில் ஒரே நாளில் சுமார் ரூ.2,920-க்கும் மேற்பட்ட உயர் வருவாய் தரும் வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “உலகளாவிய திறன் மையங்கள், மேம்பட்ட உற்பத்தி மற்றும் உயர்கல்வித் துறைகளில் தமிழ்நாட்டை சர்வதேச அளவில் முதன்மை மையமாக மாற்றுவதே நமது இலக்கு” எனக் குறிப்பிட்டு, முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து அரசு உதவிகளும் உடனுக்குடன் வழங்கப்படும் என உறுதியளித்தார்.