ரஷ்ய வங்கியியல் அமைப்பிலிருந்து தொழிலதிபர்கள், பில்லியனர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2.4 டிரில்லியன் ரூபிள்களுக்கும் (சுமார் $30 பில்லியன் டாலர்) அதிகமானப் பணத்தை அவசர அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் உடனானப் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், ரஷ்யாவின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதால், வங்கிகளில் த வைக்கப்பட்டிருக்கும் டெபாசிட்களை அதிபர் புடின் தலைமையிலான அரசு போருக்காகப் பறிமுதல் செய்துவிடுமோ என்ற அச்சத்துடனேயே பெரும் பணக்காரர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தொடர்ச்சியான உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக நாட்டின் உள்கட்டமைப்புகள் மற்றும் தொழிற்கூடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால், பணத்தை வங்கிகளில் சேமித்து வைப்பதை விட ரொக்கமாக வைத்திருப்பதே பாதுகாப்பானது என்ற மனநிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 286 பில்லியன் ரூபிள்களுக்கு மேல் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரஷ்ய மத்திய வங்கி தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
ரஷ்யாவில் பல முன்னணி தொழில் அதிபர்களின் சொத்துக்களை அரசு ஏற்கனவே வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்து தேசியமயமாக்கியுள்ள சம்பவங்கள், தொழிலதிபர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன்காரணமாக, பில்லியனர்கள் தங்களது எஞ்சிய மூலதனத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பணத்தைக் கசகஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் தரகு கணக்குகள் மூலம் சர்வதேசச் சந்தைகளுக்கு மாற்றத் தொடங்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் பில்லியனர்களும் பொதுமக்களும் பல ஆயிரம் கோடிகளைத் திரும்பப் பெறுவதால், ரஷ்ய வங்கிகளில் கடும் பணப்புழக்க நெருக்கடி (Liquidity Crisis) ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் திட்டமிடப்பட்ட அரசுப் பத்திர ஏலங்களைக் கூட ரஷ்ய நிதி அமைச்சகம் ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், இந்த அபரிமிதமானக் மூலதன வெளியேற்றம் ரஷ்யாவின் பொருளாதார நிலைத்தன்மைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.