மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் (CAR) மேற்குப் பகுதியில் உள்ள ஜாம்போய் (Zamboye) கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் நிலத்தடி சுரங்கப் பாதை உடைப்பு காரணமாக 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேமரூன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த திறந்தவெளி சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான உள்ளூர் தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
சுரங்கத்தின் தரைப்பகுதி திடீரென முழுவதுமாக உள்வாங்கிச் சரிந்ததில், அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுப்பட்டுள்ளது. மேலும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதுகாப்பற்ற முறையிலும் முறையான தடையின்மைச் சான்றிதழ்கள் இன்றியும் செயல்பட்டு வந்த இந்தச் சிறிய அளவிலான தங்கச் சுரங்கத்தில், வறுமையின் காரணமாக இளைஞர்களும் பெண்களும் ஆபத்தான முறையில் பணியாற்றி வந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பாபுவா நகர அரசு வழக்கறிஞர், விபத்தின் பின்னணி மற்றும் சட்டவிரோத நடவடிக்கை குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை காரணமாக மக்கள் இதுபோன்ற ஆபத்தான தன்னிச்சைச் சுரங்கப் பணிகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், 100-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய இந்தத் தங்கச் சுரங்க விபத்து, சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் ஆப்பிரிக்க பிராந்தியத்திலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.