வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு இப்படி நடக்குமென யாருமே எதிர்பார்க்கவில்லை!

கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடை கடைவீதி பகுதியில் தனியாக வசித்து வந்தவர் முத்துலட்சுமி (வயது 70). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

இதில் மூத்த மகன் வெங்கடராமன் ஈரோட்டிலும், இளைய மகன் கிருஷ்ணமூர்த்தி வடமதுரையிலும், மகள் உஷா என்ற சுப்புலட்சுமி கவுண்டம்பாளையத்திலும் தங்களின் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதனால் முத்துலட்சுமி, தனது வீட்டில் 2 அறைகளை வாடகைக்கு விட்டு இருந்தார். அதில் சமையல் வேலை செய்யும் இளைஞர்கள் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை அவருடைய மகள், முத்துலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் போன் செய்துள்ளார். அப்போது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த உஷா, தாயின் வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதுபற்றி அவர் தனது மூத்த சகோதரருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள், வீட்டின் சுவரை தாண்டி உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டிற்குள் கட்டிலில் முத்துலட்சுமி கழுத்து நெரிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாயின் உடலை பார்த்து உஷா கதறி அழுதார். பிணமாக கிடந்த முத்துலட்சுமி அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, தங்கசங்கிலி, செல்போன் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

யாரோ மர்மஆசாமிகள் முத்துலட்சுமியை தனியாக இருப்பதை அறிந்து வீட்டுக்குள் புகுந்து அவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்த தகவலின் பேரில் துடியலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பவம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் மற்றும் அவருடைய வீட்டின் அறையில் தங்கியிருந்த இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் திருட்டு போன செல்போன் எண்ணை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Contact Us