இலங்கை விரையும் ரஷ்ய ஹெலிகொப்டர்கள்?

ரஷ்யாவின் உற்பத்திகளில் ஒன்றான எம்.ஐ-171 ரக 04 ஹெலிகொப்டர்களை அரசாங்கம் விரைந்து கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையணிக்கு வாடகைக்கு விடுவதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில்,

இந்த ரக ஹெலிகொப்டரின் விலை ஏறக்குறைய 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் என்ற (Rosoboron export) ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து ஹெலிகொப்டர் கொள்வனவை செய்ய பாதுகாப்பு அமைச்சின் கவனம் திரும்பியிருக்கின்றது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் குறித்த ரஷ்ய நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதியாக எம்.டி.வி நிறுவனத்தின் சொந்தக்காரரான கிலி மஹராஜாவின் மஹாராஜா நிறுவனமே இயங்கிவந்தது.

2400 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்தி மேற்படி ரஷ்ய நிறுவனத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட கப்பலொன்றை கொள்வனவு செய்யவும் இரகசிய கொடுக்கல் வாங்கலைச் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவே அப்போதைய ஒன்றிணைந்த எதிரணியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

எவ்வாறாயினும் அப்போதைய எதிர்க்கட்சியினர் இன்றைய ஆளுங்கட்சியிலுள்ள நிலையில், ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தற்போதைய இலங்கைப் பிரதிநிதியாக ராஜபக்ஷவினரது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பாதுகாப்பு அமைச்சினால் ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஊடாக BTR 82A ரக 60 ஆயுத வாகனங்களையும் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன – என்றுள்ளது.

Contact Us