அட்டூழியங்கள் புரிந்தாலும் நாங்கள் ஓயமாட்டோம்; உடைக்கப்பட்ட முள்ளிவாய்கால் முன் சபதம்!

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியினையே காட்டுமிராண்டித்தனமாக உடைத்துச் சேதப்படுத்துகின்றவர்கள், தமிழர்களுக்கு எவ்வாறு தீர்வினைத்தருவார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி, நேற்று (12) இரவு விசமிகளால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டிருந்தனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த உலகிற்கே தெரியும் கடந்த மே 18 என்பது, எமது தமிழினத்தினை இலங்கை அரசபடைகள் குண்டுகள் பொழிந்து கொடூரமாக அழித்த நாளாகும்.

இந்ந நாளினை நாம் ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றோம். குறிப்பாக உறவுகளை இழந்த மக்கள் பெருமளவானோர் இந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் ஒன்றுகூடி தங்களுடைய உறவுகளை எண்ணி கண்ணீர்விட்டு, தத்தமது சமய முறைப்படி அஞ்சலிகளையும் மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், நாம் அனைவரும் இணைந்து அமைத்த நினைவுத்தூபி நேற்றையதினம் இரவு விசமிகளால் உடைக்கப்பட்டிருக்கின்றது. அந்த இடத்தினைச் சூழ இராணுவம் குவிக்கப்பட்டிருந்தும், நினைவுத்துாபி உடைத்த இடத்தில் இராணுவத்தின் காலணித் தடங்களை ஒத்த தடையங்கள் இருப்பதும், எமக்கு பல சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது.

குறிப்பாக காட்டுமிராண்டித்தனமாக சிங்களக்காடையர்களால் உடைக்கப்பட்டிருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும். இப்படியான கொடூர எண்ணத்தைக் கொண்டவர்கள் தமிழர்களுக்கு எப்படித் தீர்வு தரப்போகின்றார்கள்? நீங்கள் எவ்வளவு அட்டூழியங்கள் புரிந்தாலும் எங்களுடைய நடவடிக்கைகள் தொடரும் என்பதைத் தெளிவாகச் சொல்லிவைக்க விரும்புகின்றோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Contact Us